உடல் உறுப்பு தானத்தில் நாட்டின் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகிறது. இத்தகைய சூழலில் தான் தம் உறுப்புகளை ஈந்து பல உயிர்களை காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில் அரசு மரியாதை செய்யப்படும் எனவும், இறக்கும் முன்பு உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “உயிர் பிரிந்த பின் தமது உடற்பாகங்கள் தீக்கும் மண்ணுக்கும் இரையாகாமல், பிறரது வாழ்வுக்குத் துணையாவதே பெருவாழ்வு. அதனால்தான், துணை முதலமைச்சராக இருந்தபோது, எனது உடலுறுப்புகளைக் கொடையளித்தேன்; முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின், உடலுறுப்புகளைக் கொடையளிப்போருக்கு அரசு மரியாதையுடன் விடை கொடுக்கப்படும் என்று அறிவித்தேன்.
2023 செப்டம்பர் 23-இல் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது முதல், இதுவரையில் 479 பேர் (கடந்த ஆண்டு மட்டும் 268 பேர்) தங்களது உடலுறுப்புகளை ஈந்து, பல நூறு உயிர்களை வாழ வைத்திருக்கிறார்கள்! அவர்களுக்கு எனது வணக்கம். உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாகி இருப்பது கூடுதல் சிறப்பு” எனத் தெரிவித்துள்ளார்.