தஞ்சாவூர்  மாவட்டம் ஒரத்தநாட்டைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதியான எல். கணேசன், ‘மொழிப்போர் தளபதி’ என்று அழைக்கப்பட்டவர். எல்.ஜி என அரசியல் வட்டாரத்தில் அழைக்கப்படும் இவர், பேரறிஞர் அண்ணா, கலைஞர், வைகோ உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களுடன் நெருக்கமாக இருந்துள்ளார். பல்வேறு மொழிப்போரிலும், மிசா போராட்டம் உள்ளிட்டவற்றிலும் கலந்துகொண்ட இவர், 3 முறை எம்.எல்.ஏ.வாகவும், ஒரு முறை எம்.எல்.சி.யாகவும், ராஜ்யசபா எம்.பி.யாகவும் பதவி வகித்துள்ளார்.

Advertisment

திமுக உயர்நிலைத் திட்டக்குழு உறுப்பினராகவும் இருந்த அவர், ஒரத்தநாடு தொகுதியில் இருந்து 2 முறை எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதன் பின்னர், திமுகவில் இருந்து பிரிந்த வைகோ மதிமுகவை தொடங்கியபோது திமுகவில் இருந்து விலகி மதிமுகவிற்கு சென்றார். அப்போது மதிமுக சார்பில் திருச்சி எம்.பி.யாக பதவி வகித்தார். அதனைத் தொடர்ந்து சில ஆண்டுகள் கழித்து திமுகவில் இணைந்த இவர், உடல்நலக்குறைவு காரணமாக வீட்டிலேயே ஓய்வு எடுத்து வந்துள்ளார். 

Advertisment

இத்தகைய சூழலில் தான் எல். கணேசன் உயிரிழந்துள்ளார். இவரது மறைவு திமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எல். கணேசனின் இறுதிச்சடங்கு சொந்த ஊரான ஒரத்தநாடு அருகே உள்ள கண்ணந்தகுடி கீழையூரில் நாளை (05.01.2026) காலை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மறைந்த எல். கணேசனின் உடலுக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

lg-dmk

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மொழிப்போர்த் தளபதி 'எல்.ஜி.'க்கு இறுதி மரியாதை செலுத்தினேன்.தமிழுணர்வு உள்ளவரை அவர் நினைவுகூரப்படுவார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.  முன்னதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டிருந்த இரங்கல் செய்தியில், “மொழிப்போர்க் களத்தில், இந்திமொழியின் ஆதிக்கத்திற்கு எதிராகப் புறப்பட்ட மாணவர் படையின் தளகர்த்தர்களில் ஒருவரும் - திமுக உயர்நிலைச் செயல்திட்டக் குழு உறுப்பினருமான எல்.கணேசன் மறைந்த செய்தியால் பெரிதும் துயருற்றேன்.

Advertisment

சட்டமன்றம் - சட்டமேலவை - நாடாளுமன்றம் என முழங்கிய அவரை இனி நாம் காண முடியாது என்பதை எண்ணும்போதே உள்ளம் வேதனையால் துடிக்கிறது. கலைஞரின் பாசத்தைப் பெற்ற 'எல்.ஜி.', 1989-இல் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது, அவரது பாராளுமன்றச் செயலாளராகவும் இருந்தார். நான் தஞ்சை மாவட்டத்திற்குச் செல்லும்போதெல்லாம் தவறாது அவரது இல்லத்திற்குச் செல்வேன்; அவரும் புன்சிரிப்புடன் வரவேற்று, திராவிட மாடல் அரசின் திட்டங்கள் மக்களிடம் பெற்றுள்ள வரவேற்பு குறித்து மகிழ்ச்சி பொங்கப் பெருமையோடு சொல்வார்.

lg-mks-1

திராவிட இயக்கக் கொள்கைகள் மீது பற்றுகொண்டு, மக்களின் நன்மதிப்பைப் பெற்று அரசியல் களத்தில் பணியாற்றிய அவர் என்றும் நம் நெஞ்சங்களில் நிறைந்திருப்பார். அவரது பிரிவால் வாடும் திமுக தொண்டர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் என அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.