டித்வா புயல் நேற்று (30.11.2025) இரவு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்து சென்னைக்கு தென்கிழக்கே 90 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. தொடர்ந்து இன்று மாலைக்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலு குறையும் என்று இந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisment

இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில்  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தலைமையில் இன்று (01.12.2025) டித்வா புயல் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் பயிர்சேதங்கள் குறித்தும், மேற்கொள்ளப்பட்டுவரும் நிவாரண நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில், தற்போது பெய்துவரும் மழையினால், வேளாண் பயிர்கள் குறிப்பாக நெற்பயிர் சேதம், இதர பயிர்கள் சேதம் குறித்தும், தோட்டக்கலைப் பயிர்கள் சேதம் குறித்தும் கணக்கெடுப்பு பணிகளை தொடங்கி, அதுதொடர்பாக உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். 

Advertisment

மேலும், கனமழையினால் பாதிக்கப்பட்ட இடங்களில் தேங்கியுள்ள வெள்ள நீர் வடிவதற்கான அனைத்துப் பணிகளையும் உடனடியாக மேற்கொள்ளுமாறு அவர் உத்தரவிட்டுள்ளார். அதோடு, அக்டோபர் மாதம் பெய்த மழையினால் ஏற்பட்ட பயிர்பாதிப்புகளுக்கான கணக்கெடுப்புப் பணிகள் முடிவடைந்து 33 சதவிகிதத்திற்கும் மேல் பாதிக்கப்பட்ட 4,235 எக்டர் வேளாண் பயிர்களுக்கும், 345 எக்டர் தோட்டக்கலைப் பயிர்களுக்கும் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உரிய நிவாரணம் வழங்கிட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார். 

tn-sec-mks

டித்வா புயல் காரணமாக குடிசை வீடுகள் மற்றும் இதர வீடுகளின் சேதங்கள், மனித உயிரிழப்புகள், கால்நடை உயிரிழப்புகள் போன்றவற்றிற்கு இழப்பீடுகளை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் விரைந்து வழங்கிட வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டது. கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் 39 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான குடிநீர், உணவு, மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும் என்றும், இப்பணிகளை தேவைப்படும் காலம் வரை தொடர்ந்து செய்துதர வேண்டும் என்றும்  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

Advertisment

மேலும் இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவரது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “டிட்வா புயலால் பெய்து வரும் தொடர் மழையினால் கூடுதல் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் டெல்டா உழவர்களைக் காப்போம். அக்டோபர் தொடங்கி, தற்போது வரையிலான வடகிழக்கு பருவமழையின், கனமழையினால் சேதமடைந்துள்ள நெற்பயிர்கள் உள்ளிட்ட வேளாண் பயிர்கள் & வீடுகள், மனித உயிரிழப்புகள், கால்நடை பலி ஆகியவற்றுக்கு உடனடியாக மாநிலப் பேரிடர் நிதியில் (SDRF) இருந்து இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளேன். 

rain
கோப்புப்படம்

வெள்ளப் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் அனைத்து இடங்களிலும் நீரை வடிய வைக்கும் பணிகளைத் தொடர்ந்து நேரடியாகக் கண்காணித்து வருகிறேன். முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளையும் தேவைப்படும் காலம் வரை தமிழக அரசு வழங்கும், மக்களைக் காக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.