தமிழக காவல்துறையில் பணியாற்றும் காவலர்களில் மதுவிலக்கு அமலாக்கப் பணியில் பாராட்டத்தக்க வகையில் பணியாற்றும் காவலர்களுக்கு காந்தியடிகள் காவலர் விருது ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 5 காவல்துறை பணியாளர்களுக்கு காந்தியடிகள் காவலர் விருது வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “விழுப்புரம் மண்டல மத்திய நுண்ணறிவுப் பிரிவு காவல் ஆய்வாளர் ப. நடராஜன், விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் மா. சத்யாநந்தன், கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் சு. மணிகண்டன், கடலூர் மாவட்டம் புத்தூர் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் க. நடராஜன், சேலம் மாவட்டம் மத்திய நுண்ணறிவுப் பிரிவு தலைமைக் காவலர் பெ. கண்ணன் ஆகிய 5 பேருக்கும் மதுவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாக செயல்பட்டதற்காக 2025ஆம் ஆண்டுக்கான காந்தியடிகள் காவலர் விருது வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இவ்விருதுகள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம் நாள் குடியரசு தினத்தன்று வழங்கப்படும். இவ்விருதுடன். பரிசுத்தொகையாக ரூ.40 ஆயிரம் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.