குடியரசு துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு சி.பி. ராதாகிருஷ்ணன் முதன் முறையாக நேற்று முன்தினம் (28.10.2025) 3 நாள் பயணமாகத் தமிழகம் வருகை புரிந்தார். அரசு முறைப் பயணமாக செஷல்ஸ் நாட்டுக்குப் பயணம் மேற்கொண்ட குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், அந்நாட்டு அதிபர் பாட்ரிக் ஹெர்மினியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டார். அதன் பிறகு நெசல்ஸ் நாட்டிலிருந்து இந்தியா திரும்பிய குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கோவை விமான நிலையம் வந்தடைந்தார்.
அப்போது விமான நிலையத்தில் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் சு. முத்துசாமி, மு.பெ. சாமிநாதன் ஆகியோர் வரவேற்றனர். இதனையடுத்து விமான நிலையத்தில் இருந்து அவினாசி சாலை தொடக்கம் வரையில் இருந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பல்வேறு தரப்பினரையும் நேரடியாகச் சந்தித்து நன்றித் தெரிவித்துக் கொண்டார். இதனையடுத்து கோவை மற்றும் திருப்பூரில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளில் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.
இதனையடுத்து ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெற்று வரும், பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 118வது பிறந்த நாள் விழா மற்றும் 63வது குருபூஜை பசும்பொன்னில் இன்று (30.10.2025) கலந்து கொள்ள உள்ளார். இதற்காக குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் மதுரைக்கு வருகை தந்துள்ளார். அதே சமயம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 2 நாள் பயணமாகத் தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதனையடுத்து முதல்வர் மு.க. ஸ்டாலினும் பசும்பொன்னில் நடைபெற்று வரும் நிகழ்வில் கலந்துகொள்ள மதுரை வந்தடைந்தார்.இந்நிலையில் மதுரை சுற்றுலா மாளிகையில் குடியரசுத் துணை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று (29.10.2025) சந்தித்து பேசினார்.
இந்நிகழ்வின்போது அமைச்சர்கள் கே.என். நேரு, ஐ. பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் உடனிருந்தனர். இது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நம் தமிழ்நாட்டில் பிறந்து நாட்டின் குடியரசுத் துணைத் தலைவராக உயர்ந்துள்ள சி.பி. ராதாகிருஷ்ணனை மாமதுரை மண்ணில் சந்தித்து உரையாடினேன். தமது சீரிய பணிகளால் அவர் நம் தமிழ்நாட்டுக்கும் இந்திய நாட்டுக்கும் பெருமை சேர்ப்பார்” எனத் தெரிவித்துள்ளார்.
Follow Us