பெருநகர சென்னை மாநகராட்சியின் 5 மற்றும் 6வது மண்டலங்களில் மேற்கொள்ள வேண்டிய தூய்மைப் பணிகளை 276 கோடி ரூபாய்க்குத் தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கி கடந்த ஜூன் மாதம் 16ஆம் தேதி (16.06.2025) மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் பில்டிங் அருகில் தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் 13 நாட்களாகத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதற்கிடையே இந்த போராட்டம் தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணையில் அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டம் நடத்துவதால் தூய்மைப் பணியாளர்களை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்துமாறு  நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisment

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களைக் கைது செய்யும் முனைப்பில் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். இதற்காக ரிப்பன் மாளிகை வளாகம் நேற்று முன்தினம் (13.08.2025) மாலை முதலே போலீசாரின் முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நீதிமன்றத்தின் உத்தரவுக்கு பிறகும் போராட்டத்தைத் தொடர்ந்து தூய்மைப் பணியாளர்கள் நடத்தி வந்த நிலையில் போலீசார் குண்டுகட்டாக தூய்மைப் பணியாளர்களைக் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இத்தகைய சூழழில் தான் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் 21வது அமைச்சரவைக் கூட்டம் நேற்று (14.08.2025) நடைபெற்றது. 

அதில், “தூய்மைப் பணியாளர்களுக்குக் காலை உணவு, அவர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படும், அவர்களது குடும்பத்தினருக்குச் சுயதொழில் உதவி செய்யப்படும். மேலும் தூய்மைப் பணியாளர்களின் நலவாழ்வுக்காக ரூ.10 லட்சம் காப்பீடு, 30 ஆயிரம் வீடுகள் அல்லது குடியிருப்புகள் கட்டித்தரப்படும். தூய்மைப் பணியாளர்கள் பணியின்போது இறக்க நேரிட்டால் ரூ. 10 லட்சம் நிவாரண நிதி, தூய்மைப் பணியாளர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கண்டறிவதற்கும், சிகிச்சை அளிப்பதற்கும் தேவையான தனித்திட்டம்  செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டது.

இந்நிலையில் தூய்மைப் பணியாளர்களுக்கு பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டமைக்காக அனைத்து சங்க கூட்டமைப்பின் நிர்வாகி பியூலா ஜான் செல்வராஜ், சென்னை மாநகராட்சி மலேரியா மற்றும் சுகாதார தொழிலாளர்கள் சங்கத்தின் நிர்வாகி பி.ஜெயசங்கர், பெருநகர சென்னை மாநகராட்சி அனைத்து துறை தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகி எஸ்.புருசோத்தமன், தொழிலாளர் காங்கிரஸ் டிரேட் யூனியன் நிர்வாகி ஐ.ஜெயகுமார், பெருநகர சென்னை மாநகராட்சி டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பணியாளர் சங்கத்தின் நிர்வாகி செங்குட்டுவன் உள்ளிட்டவர்கள் முதல்வர் மு.க. ஸ்டாலினை அவரது முகாம் அலுவலகத்தில்  இன்று (15.08.2025) நேரில் சந்தித்து தங்களது நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

Advertisment

mks-sanitation-workers-1

அதே போன்று உள்ளாட்சித் துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் நகராட்சி பேரூராட்சி தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகி ஆர்.சரவணன், பெருநகர சென்னை மாநகராட்சி அனைத்து பணியாளர்கள் முன்னேற்ற நலச் சங்கத்தின் நிர்வாகி ஜி.ராமு, டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பணியாளர் சங்கத்தின் நிர்வாகி எஸ்.அன்புதாசன், தமிழ்நாடு அனைத்து மாநகராட்சிகள் ஊழியர்கள் முன்னேற்ற சங்கத்தின் நிர்வாகி ஜி.சத்தியகுமார், துப்புரவு மேற்பார்வையாளர், துப்புரவு ஆய்வாளர், துப்புரவு மேஸ்திரி சங்கத்தின் நிர்வாகி முத்து ரவிச்சந்திரன் உள்ளிட்ட பெருநகர சென்னை மாநகராட்சியின் ஊழியர் தொழிற்சங்கங்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து தங்களது நன்றியினை தெரிவித்துக் கொண்டனர். 

இந்த சந்திப்பின் போது அமைச்சர்கள் சேகர்பாபு,  மா. சுப்பிரமணியன், எ.வ. வேலு,  கே.என். நேரு,  சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், முதல்வரின் தனிச் செயலாளர்கள் எனப் பலரும் உடட்ன் இருந்தனர். மேலும் இது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தூய்மைப் பணியாளர்களின் பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகளைச் சந்தித்தேன். நேற்று நமது அரசு வெளியிட்ட அறிவிப்புகளுக்கு மகிழ்ச்சி தெரிவித்து, மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அவற்றையும் பரிசீலித்து நிறைவேற்றிக் கொடுப்போம். என்றைக்கும் நாம் உழைக்கும் மக்களுக்குத் துணையாக நிற்போம்” எனத் தெரிவித்துள்ளார்.