தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் வழக்கமாக மேற்கொள்ளும் நடைப்பயிற்சியில் கடந்த 21ஆம் தேதி (21.07.2025) ஈடுபட்டிருந்தார். அப்போது அவருக்கு லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டது. இதனையடுத்து சென்னை கிரிம்ஸ் சாலையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தேவையான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. 

அதன் பின்னர் முதல்வர் மு.க. ஸ்டாலின் மருத்துவமனையில் 7வது நாளாகக் கடந்த ஞாயிற்றுக்கிழமை (27.07.2025) வரை சிகிச்சை பெற்று வந்தார். அதன் பின்னர் அன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வீடு திரும்பினர். இத்தகைய சூழலில் தான் கடந்த 10 நாட்களுக்குப் பிறகு முதல்வர் மு.க. ஸ்டாலின், இன்று (31.07.2025) காலை தலைமைச் செயலகம் வருகை தந்து பல்வேறு துறைகளின் முடிவுற்ற திட்டப்பணிகளைத் தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு காணொளி காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார். 

முன்னதாக ஆழ்வார்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது பிரேமலதா, முதல்வர் மு.க. ஸ்டாலினின் உடல்நலம் குறித்து விசாரித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. அப்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் எ.வ. வேலு ஆகியோர் உடன் இருந்தனர். அதேசமயம் தேமுதிக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் எல்.கே. சுதீஸ், முத்த நிர்வாகிகளான பார்த்தசாரதி, ஆனந்த் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். 

அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தேமுதிகவின் நிலைப்பாடு  குறித்து உறுதியாகாத நிலையில் இந்த சந்திப்பு அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாகப் பார்க்கப்படுகிறது. அதே போன்று முதல்வர் மு.க. ஸ்டாலினை, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசியுள்ளார். அடையாறு பூங்காவில் காலை நடைப்பயிற்சி சென்றபோது இருவரும் சந்தித்துப் பேசிக் கொண்டதாகக் கொண்டார். அப்போது முதல்வர் மு.க. ஸ்டாலினிடம், ஓ. பன்னீர்செல்வம் நலம் விசாரித்ததாகக் கூறப்படுகிறது. இன்று முக்கிய முடிவை அறிவிப்பதாக ஓ. பன்னீர்செல்வம் கூறியிருந்த நிலையில் முதல்வரை சந்தித்துப் பேசி இருப்பது குறிப்பிடத்தக்கது.