இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள் பாரம்பரிய மீன்பிடிப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் இன்று (28.12.2025) கைது செய்தனர். இந்நிலையில், தமிழ்நாடு மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவதைத் தடுக்கவும், கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். 

Advertisment

உரியத் தூதரக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 27.12.2025 அன்று மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று மீனவர்களை அவர்களது மீன்பிடிப் படகுடன் இலங்கை கடற்படையினர் இன்று (28.12.2025) கைது செய்துள்ளது.  மற்றொரு சம்பவத்தை வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். 

Advertisment

அதாவது, தமிழக மீனவர்களும் அவர்களது மீன்பிடிப் படகுகளும் இலங்கை அதிகாரிகளால் சிறை பிடிக்கப்படுவது தங்கு தடையின்றி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இக்கைது நடவடிக்கைகள் நமது மீனவர்களின் வாழ்வாதாரத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, தமிழ்நாட்டைச் சேர்ந்த 248 மீன்பிடிப் படகுகளும், 61 மீனவர்களும் இலங்கை அதிகாரிகளின் காவலில் உள்ளனர். எனவே எதிர்காலத்தில் இது போன்ற கைது சம்பவங்கள் நிகழாமல் தடுக்கவும், இலங்கை காவலில் உள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவாக விடுவிக்கவும் உரியத் தூதரக வழிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.