20 லட்சம் மக்கள் தொகை இல்லாமல் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு அனுமதி அளிக்க முடியாது எனக் கூறி கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான தமிழ்நாடு அரசின் திட்ட அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பியது. மேலும், கோவையில் 15.84 லட்சம், மதுரையில் 15 லட்சம் மட்டுமே மக்கள் தொகை இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்தது. அதே சமயம் மக்கள் தொகை குறைவாகவுள்ள ஆக்ரா, நாக்பூர், புனே மற்றும் கான்பூர் உள்ளிட்ட நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கோயம்புத்தூர் மற்றும் மதுரை மாநகரங்களுக்கான மெட்ரோ இரயில் சேவைக்கான விரிவான திட்ட அறிக்கைகளை மீண்டும் பரிசீலனை செய்து, தமிழ்நாட்டில் இத்திட்டங்களை நடைமுறைப்படுத்திட தகுந்த அறிவுரைகளை சம்பந்தப்பட்ட துறைக்கு வழங்கிடக் கோரி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மத்திய அரசு நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு முறையும், உங்களுடனான (பிரதமர் மோடி) எனது சந்திப்பிலும் கோவை மற்றும் மதுரைக்கு மெட்ரோ ரயில் வசதி வேண்டும் என்று நான் பலமுறை கோரிக்கை வைத்துள்ளேன்.
நமது நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் பங்களித்தவர்களில் ஒருவர்களான தமிழக மக்களுக்கு, இந்த முன்மொழிவுகள் நிராகரிக்கப்பட்டதால் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளனர். இவை மாநிலத்தின் வளர்ச்சி இயந்திரங்களுக்கு முக்கியமான உள்கட்டமைப்புத் திட்டங்களாகும். தமிழ்நாட்டின் வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சி. மெட்ரோ ரயில் சேவையின் முக்கியத்துவத்தை விளக்க, எனது குழுவுடன் உங்களைச் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன். மதுரை மற்றும் கோவை மெட்ரோ திட்டத்துக்கு அனுமதி வழங்க பிரதமர் மோடி அதற்குத் துணை நிற்க வேண்டும். இது குறித்து அவர் உடனடியாகத் தலையிட வேண்டும். அதற்காக அவரை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கத் தயாராக உள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Follow Us