Advertisment

“இத்தகைய அறிவிப்புகள் கூட்டாட்சி உணர்வுக்கு எதிரானதாக அமையும்” - பிரதமருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!

cm-mks-4

ஒன்றிய அரசு சில சுரங்கத் திட்டங்களுக்கு பொது மக்கள் கருத்துக் கேட்பிலிருந்து விலக்கு அளித்துள்ளது. இதனால் ஏற்படும் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ள குறிப்பாணையினைத் திரும்ப பெற உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று (12-9-2025) கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் “இந்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுப் பிரிவால் வெளியிடப்பட்டுள்ள அலுவலகக் குறிப்பாணையின் மீது கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன் 

Advertisment

அந்தக் குறிப்பாணையின் மூலம், பகுதி பி-யில் (B) அறிவிக்கப்பட்ட அணு கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்தின் முதல் அட்டவணையின் பகுதி டியில் அறிவிக்கப்பட்ட முக்கியமான மற்றும் அரிய வகை கனிமங்களின் அனைத்து சுரங்கத் திட்டங்களும் பொது மக்கள் கருத்துக் கேட்பின் தேவையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன. மேலும், அத்தகைய அனைத்துத் திட்டங்களும் சம்பந்தப்பட்ட குத்தகைப் பகுதியின் அளவைக் கருத்தில் கொள்ளாமல் ஒன்றிய அளவில் மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள் கடற்கரை மணல் அமைப்புகளில் படிந்துள்ள அரிய மண் கனிம கூறுகளின் படிவுகளைக் கொண்டுள்ளன. இந்தக் கடற்கரைகள் சுற்றுச்சூழல் ரீதியாக மிகவும் பாதிக்கப்படக்கூடியவை 

Advertisment

மன்னார் வளைகுடா மற்றும் பாக் விரிகுடாவின் மணல் கடற்கரைகள் அழிந்து வரும் ஆமைகளின் இனப்பெருக்கம், பவளப்பாறைகள், சதுப்பு நிலங்கள் மற்றும் மணல் திட்டுகளுக்கு தாயகமாக உள்ளன. அவை கடலரிப்பு மற்றும் சூறாவளி நிகழ்வுகளுக்கு எதிராக இயற்கைக் கேடயங்களாகச் செயல்படுகின்றன. மேலும், இந்தச் சுற்றுச்சூழல் அமைப்புகள் பல்லுயிரியலை நிலைநிறுத்துகின்றன. கரையோரங்களை உறுதிப்படுத்துகின்றன. கார்பனை பிரித்தெடுக்கின்றன மற்றும் கடல் அரிப்பிலிருந்து சமூகங்களைப் பாதுகாக்கின்றன. இத்தகைய பகுதிகளில் சுரங்கம் என்பது இயல்பாகவே சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் கொண்டது. எனவே, உள்ளூர் சமூகங்களின் முழுமையான ஈடுபாட்டுடன் கடுமையான ஆய்வு தேவைப்படுகிறது. 

1997ஆம் ஆண்டு திருத்தப்பட்ட 1994 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு (EIA) அறிவிப்பு, கட்டாய பொது மக்கள் கருத்துக் கேட்புகளை அறிமுகப்படுத்தியது. இந்தப் பங்கேற்பு சுற்றுச்சூழல் நிர்வாகத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறி, ஒரு மைல்கல்லாகத் திகழ்கிறது. இந்தப் பாதுகாப்பு 2006ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு (EIA) அறிவிப்பில் வலுப்படுத்தப்பட்டது. பொது மக்கள் கருத்துக் கேட்பிருந்து திட்டங்களுக்கு விலக்கு அளிப்பது என்பது, வாழ்வாதார இழப்பு, இடப்பெயர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் தொடர்பான நியாயமான கவலைகளை எழுப்பும் உள்ளூர் சமூகங்களின் உரிமையைப் பறிக்கும் என்றும், இது மக்கள் பங்கேற்கும் ஜனநாயகத்தின் கொள்கைகளை பலவீனப்படுத்தும்.  

ஒன்றிய அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ள இந்தக் குறிப்பாணை; கடுமையான சட்டரீதியான கவலைகளையும் எழுப்புகிறது. தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கடந்த காலங்களில் சட்டப்பூர்வ பாதுகாப்புகளை நீர்த்துப்போகச் செய்யும் இத்தகைய அலுவலகக் குறிப்பாணைகளை ரத்து செய்துள்ளது. உச்சநீதிமன்றம் அலுவலகக் குறிப்பாணைகள் போன்ற நிர்வாக அறிவுறுத்தல்கள் மூலம் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) கட்டமைப்பில் கணிசமான திருத்தங்களைக் கொண்டு வரமுடியாது என்றும் அத்தகைய கருவிகள் சட்டப்பூர்வ அறிவிப்புகளை மீற முடியாது என்றும் தீர்ப்பளித்துள்ளது. மேலும், தற்போதைய அலுவலகக் குறிப்பாணை பொது மக்கள் கருத்துக் கேட்பிற்கு வழிவகுக்காமல் அனுமதிக்க முடியாத நிர்வாகச் சட்டத் திருத்தத்திற்குச் சமமாக உள்ளது. எனவே இது நிலைக்கத்தக்கதல்ல. 

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த கொள்கை மாற்றங்கள் நாடாளுமன்றத்திலும் மாநில சட்டமன்றங்களிலும் வெளிப்படையாக விவாதிக்கப்பட வேண்டும். மாநில அரசுகள் மற்றும் பொதுமக்களின் உரிய ஆலோசனையுடன் செய்யப்பட வேண்டும். மேற்கூறிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் வெளியிடப்படும் இத்தகைய அறிவிப்புகள் கூட்டாட்சி உணர்வுக்கும், நமது நாட்டின் மக்களாட்சி நெறிமுறைகளுக்கும் எதிரானதாக இது அமையும். மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, 08.09.2025 நாளிட்ட அலுவலகக் குறிப்பாணையை உடனடியாகத் திரும்பப் பெறுமாறு ஒன்றிய அரசை தான் வலியுறுத்துகிறேன். கடந்த காலங்களில் எப்போதும் செய்யப்பட்டது போல, நாட்டின் முன்னேற்றத்திற்கு மற்றும் பாதுகாப்புத் தேவைகளுக்கு பங்களிப்பதற்கான தமிழ்நாட்டின் உறுதிப்பாட்டை இத்தருணத்தில் மீண்டும் தான் வலியுறுத்த விரும்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Environmental letter mine mk stalin Narendra Modi union govt
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe