தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் 21வது அமைச்சரவைக் கூட்டம் கடந்த ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி (14.08.2025) நடைபெற்றது. அதில், தூய்மைப் பணியாளர்களுக்குக் உணவு, அவர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படும். அவர்களது குடும்பத்தினருக்குச் சுயதொழில் உதவி செய்யப்படும். மேலும் தூய்மைப் பணியாளர்களின் நலவாழ்வுக்காக ரூ. 10 லட்சம் காப்பீடு, 30 ஆயிரம் வீடுகள் அல்லது குடியிருப்புகள் கட்டித்தரப்படும். 

Advertisment

தூய்மைப் பணியாளர்கள் பணியின்போது இறக்க நேரிட்டால் ரூ. 10 லட்சம் நிவாரண நிதி, தூய்மைப் பணியாளர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கண்டறிவதற்கும், சிகிச்சை அளிப்பதற்கும் தேவையான தனித்திட்டம் செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் தான் தூய்மைப்பணியாளர்களுக்கு காலை, மதியம், இரவு என 3 வேளை இலவசமாக உணவு வழங்கும் திட்டத்திற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. இந்த திட்டம் முதற்கட்டமாக சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்படும் என அந்த  அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

Advertisment

இந்நிலையில் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (15.11.2025) நடைபெற்ற விழாவில் சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின தொடங்கி வைத்தார். இதனையடுத்து தூய்மை பணியாளர்களிடம் உணவின் தரம் குறித்து கேட்டறிந்தார்.  இந்நிகழ்வில் அமைச்சர்கள் கே.என். நேரு,  மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, தா.மோ. அன்பரசன், சென்னை மேயர் பிரியா ராஜன் மற்றும் தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.