தென்காசி மாவட்டம், கடையநல்லூர் வட்டம், இடைக்கால் கிராமம், திருமங்கலம் கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன் தினம் (24.11.2025) காலை சுமார் 11.00 மணியளவில் இரு தனியார் பேருந்துகள் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் பேருந்துகளில் பயணம் செய்த 6 பெண்கள் மற்றும் ஒரு ஆண் உட்பட 7 நபர்கள் உயிரிழந்தனர். அதே சமயம், இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Advertisment

இத்தகைய சூழலில் தான் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்திருந்தார் அதோடு நிதியுதவியையும் அறிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த இரங்கல் செய்தியில், “இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் வழங்கப்படும். 

Advertisment

இலேசான காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். இந்த விபத்தில் புளியன்குடி என்ற பகுதியைச் சேர்ந்த மல்லிகா என்பவரும் உயிரிழந்தார். அப்போது அவருடைய  பார்வை மாற்றுத்தரனாளி மகளான கார்த்திகா தனது  தாயை அடக்கம் செய்யும் போது, ‘நான் இனிமேல் என்ன செய்யப் போகிறேன்’ என்று கண்கலங்கிக் கதறி அழுத வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பார்ப்போரின் மனதைப் பதைபதைக்க வைத்தது.

ten-bus-ins-mks

இந்நிலையில் இந்த பேருந்து விபத்தில் தனது தாயை இழந்த பார்வை மாற்றுத் திறனாளியான கார்த்திகாவுக்கு அரசு வேலைக்கான ஆணையை வழங்கி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதோடு அவர், தொலைப்பேசி வாயிலாகவும் தொடர்பு கொண்டு கார்த்திகாவுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் நேரடியாக கார்த்திகா வீட்டிற்குச் சென்று புளியன்குடி நகராட்சியில் டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் பணி ஆணை  வழங்க உள்ளார்.

Advertisment