முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று (21.8.2025) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “நேற்று (20.08.2025) நாடாளுமன்றத்தில், நாட்டை சர்வாதிகாரத்தை நோக்கி நகர்த்தப் புலனாய்வு அமைப்புகளை வைத்து தங்களுக்கு எதிரானவர்களைப் பதவி நீக்கம் செய்ய, ஒரு கருப்பு சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறார் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா.
இதற்கு முன்பு, குடியுரிமை திருத்தச் சட்டம், வக்ஃபு திருத்தச் சட்டம் எனச் சிறுபான்மையின மக்களுக்கு எதிராக பல்வேறு சட்டங்களை எல்லாம் கொண்டு வந்தார்கள். அப்போதெல்லாம் இந்த சட்டங்களைத் திராவிட முன்னேற்றக் கழகம் எப்படி கடுமையாக எதிர்த்தோ, அதேபோல இந்த கருப்பு சட்டத்தை எதிர்ப்போம். இதையெல்லாம் அவர்கள் ஏன் செய்கிறார்கள், மக்கள் பிரச்சனையைத் திசை திருப்பச் செய்கிறார்கள். மக்களுடைய கவனத்தை மட்டும் திருப்புவது மட்டுமல்ல, நாட்டையே ஜனநாயக பாதையில் இருந்து திசை திருப்புவதற்காக அதைச் செய்கிறார்கள்” எனப் பேசினார்.
முன்னதாக நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த ஜூலை மாதம் 21ஆம் தேதி தொடங்கி இன்று வரை நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், பிரதமர், ஒன்றிய அமைச்சர்கள், முதலமைச்சர்கள் மற்றும் மாநில அமைச்சர்கள் கடுமையான குற்றவியல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு 30 நாட்கள் சிறையில் இருந்தாலோ, காவலில் இருந்தாலோ அவர்களைப் பதவி நீக்கம் செய்யும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.