தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாகத் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாகக் கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் வரக்கூடிய நேரத்தில் சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும், காவிரிப்படுகை மாவட்டங்களிலும் மழை அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக மாறினால் அதற்குத் தாய்லாந்து நாடு பரிந்துரைத்த மோந்தா (Montha) என்று பெயரிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. மற்றொருபுறம் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவ்வப்போது அதிகாரிகளோடு ஆலோசனையிலும், ஆய்விலும் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் சென்னை சீனிவாசபுரம் அருகில் உள்ள அடையாறு ஆறு கடலில் கலக்கும் முகத்துவார பகுதியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று முன்தினம் (24.10.2025) காலை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது முகத்துவாரத்தை அகலப்படுத்தும் பணியினை விரைந்து முடித்திடுமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது அமைச்சர் மா.சுப்பிரமணியன், நீர்வளத்துறையைச் சேர்ந்த உதவி செயற் பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர். இந்நிலையில் அடையாறு முகத்துவாரத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (26.10.2025) மீண்டும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலரும் உடன் இருந்தனர். செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் அடையாறு வழியாகக் கடலில் கலப்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us