ராமநாதபுரத்தில் நாளை (03.10.2025) நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகச் சென்னை விமான நிலையத்தில் இருந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் மதுரைக்கு இன்று (02.10.2025) மாலை 06.00 மணியளவில் புறப்பட்டுச் சென்றார். இதற்காகச் சென்னை விமான நிலையம் வந்திருந்த முதல்வர் மு.க. ஸ்டாலின் விமானம் மூலம் மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றார்.
அதே சமயம் முதல்வர் மு.க. ஸ்டாலினை, அமைச்சர்கள் சேகர்பாபு பாபு, தா.மோ. அன்பரசன், எ.வ. வேலு, ஆவடி நாசர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் வழியனுப்பி வைத்தனர். மேலும் கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் எனப் பலரும் விமான நிலையத்தில் குவிந்தனர். இதனையடுத்து மதுரை விமான நிலையத்திற்குச் சென்றடைந்த முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு திமுகவினர் மற்றும் பொதுமக்கள் எனப் பல்வேறு தரப்பினரும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து சிவகங்கை மாவட்டம், இடைக்காட்டூர் கிராமத்தில் உள்ள தொன்மை வாய்ந்த திரு இருதய ஆண்டவர் தேவாலயத்தில், மொத்தம் 1 கோடியே 55 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணியினை முதல்வர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சிவகங்கை மறை மாவட்ட ஆயர் ஆனந்தம், இடைக்காட்டூர் திருத்தல பங்குத் தந்தை ஜான் வசந்தகுமார் உள்ளிட்ட பேராயர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். ராமநாதபுரம் மாவட்டத்தில் 176 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை திறந்து வைக்க உள்ளார்.