மதிப்பு கூட்டு வரி (VAT - Value Added Tax), சேவை வரி, கலால் வரி, சுங்கவரி உள்ளிட்ட பல்வேறு மறைமுக  வரிகளை ஒருங்கிணைத்து, ‘ஒரே நாடு, ஒரே வரி’ என்ற கொள்கையை முன்னிறுத்தி கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1ஆம் தேதி (01.07.2027) ஜி.எஸ்.டி. (GST - Goods and Services Tax) அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் 0%, 5%, 12%, 18% மற்றும் 28% என 5 வரி விகிதங்கள் விதிக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய சூழலில் தான் நாட்டின் 79வது சுதந்திர தின விழா கடந்த 15ஆம் தேதி (15.08.2025) நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி டெல்லியில் உள்ள செங்கோட்டையின் கொத்தளத்திற்கு வருகை தந்து தேசியக் கொடியை ஏற்றி பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.

Advertisment

அதனைத் தொடர்ந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர், “ஜி.எஸ்.டி. 2.0 மறுசீரமைப்பு மக்களுக்கு தீபாவளி பரிசாக அமையும்” எனத் தெரிவித்திருந்தார்.  இதனையடுத்து வரி விகிதங்கள் 5% மற்றும் 18% என்ற 2 அடுக்குகளாகக் குறைக்கப்பட உள்ளன. அதே சமயம் புகையிலை, மது போன்ற பொருட்களுக்கு மட்டும் 40 % வரி விதிக்கப்படும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மாநில வருவாயைப் பாதுகாக்காமல், ஜி.எஸ்.டி சீர்திருத்தங்கள் மக்களுக்கு சேவை செய்ய முடியாது. மத்திய அரசின் முன்மொழியப்பட்ட ஜிஎஸ்டி விகித பகுத்தறிவு குறித்து ஆலோசிக்க எட்டு எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களின் நிதி அமைச்சர்கள் டெல்லியில் கூடினர்.

சீர்திருத்தத்தின் நோக்கத்தை வரவேற்கும் அதே வேளையில், எந்தவொரு குறைப்பும் நலத்திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பைத் தக்கவைக்கும் மாநில வருவாயைக் குறைக்கக் கூடாது என்பதை நாங்கள் வலியுறுத்தினோம். குறைந்த கட்டணங்களின் நன்மைகள் நேரடியாக சாதாரண மக்களைச் சென்றடைய வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தினோம். வருவாய் நலன்களைப் பாதுகாக்கவும், நியாயமான முடிவுகளை உறுதி செய்யவும் அனைத்து மாநிலங்கள் மற்றும் மத்திய அரசின் ஆதரவைக் கோரி, ஒருமித்த கருத்து வரைவு உருவாக்கப்பட்டு, ஜிஎஸ்டி கவுன்சிலின் முன் வைக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.