தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் வழக்கமாக மேற்கொள்ளும் நடைப்பயிற்சியில் கடந்த 21ஆம் தேதி (21.07.2025) ஈடுபட்டிருந்தார். அப்போது அவருக்கு லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டது. இதனையடுத்து சென்னை கிரிம்ஸ் சாலையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தேவையான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது முதல்வர் மு.க. ஸ்டாலின் 3 நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவமனை தரப்பில் அறிவுறுத்தியதால் அவரின் திருப்பூர் பயணம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. 

Advertisment

இதனையடுத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர், அங்கிருந்தபடியே அலுவலகப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். அதோடு முக்கிய கோப்புகளை பார்வையிட்டு ஒப்புதல் அளித்தும் வருகிறார். அதே சமயம் முதல்வர் மு.க. ஸ்டாலினின் உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை சார்பில் நேற்று  முன் தினம் (24.07.2025)விரிவான அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், “முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு ஏற்பட்ட தலைசுற்றல் பிரச்சினை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளில், இதயத்துடிப்பில் உள்ள சில வேறுபாடுகள் காரணமாகவே இந்த தலைசுற்றல் ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டது.

இதய சிகிச்சை மருத்துவர் செங்குட்டுவேலுவின் தலைமையிலான மருத்துவ வல்லுநர் குழுவின் அறிவுரையின்படி, இதனை சரி செய்வதற்கான சிகிச்சைமுறை அப்போலோ மருத்துவமனையில் செய்யப்பட்டது. அதன் மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோகிராம் சோதனையும் இயல்பாக இருந்தது. முதல்வர் மு.க. ஸ்டாலின் நலமாக உள்ளார்கள். தனது வழக்கமான பணிகளை 2 நாட்களில் மேற்கொள்வார்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மருத்துவமனையில் 6வது நாளாக இன்று (26.07.2025) சிகிச்சை பெற்று வரும் முதல்வர் மு.க. ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்தபடியே அதிகாரிகளிடம் அரசு திட்டங்கள் குறித்தும் அதன் நிலை என்ன என்பது குறிந்து கேட்டறிந்தார். 

அச்சமயத்தில் அரசின் திட்டங்கள் குறித்து தலைமை செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட அதிகாரிகளோடு ஆலோசனையில் ஈடுபட்டார். முன்னதாக முதல்வர் மு.க. ஸ்டாலினை மு.க.அழகரி, அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோரும் சந்தித்து பேசியுள்ளனர். இன்றைய தினம் தூத்துக்குடி விமான நிலையத்தின் விரிவாக்கப் பகுதியின் திறப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொள்ளும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் தொகுதியின் எம்.பி. என்ற முறையில் கனிமொழி பங்கேற்க உள்ளார். 

Advertisment

இதுதொடர்பாக அவர் முதல்வரை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மருத்துவமனையில் இருப்பதால், தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கவுள்ள கோரிக்கைகள் அடங்கிய மனுவைத் தலைமைச் செயலாளர் மூலமாகக் கொடுத்து அனுப்பியுள்ளேன். அதனை தங்கம் தென்னரசு பிரதமர் மோடியிடம் வழங்குவார்” எனத் தெரிவித்துள்ளார்.