Advertisment

“சர்வதேச அரங்கில் இந்தியாவின் கண்ணியம் பாதுகாக்கப்பட வேண்டும்” - முதல்வர்!

cm-mks-6

ஈரானியப் போர்க்கப்பலான ஐரிஸ் டெனா, இலங்கையின் காலி கடற்கரைக்கு தெற்கே சுமார் 40 கடல் மைல் தொலைவில் நேற்று முன்தினம் (04.03.2026) அதிகாலை, அமெரிக்கக் கடற்படையால் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டது. அதாவது அமெரிக்கக் கடற்படையின் அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றிலிருந்து ஏவப்பட்ட மார்க் 48 ரகத் தார்ப்பிடோ ஏவுகணை மூலம் இக்கப்பல் தகர்க்கப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவம் காரணமாக இக்கப்பலில் இருந்த சுமார் 180 பணியாளர்களில் 87 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 61 பேர் மாயமாகியுள்ளனர். மீதமுள்ள  32 பேரை இலங்கை கடற்படையினர் பத்திரமாக மீட்டனர்.

Advertisment

முன்னதாக இக்கப்பல் ஆந்திரப் பிரதேசம் மாநிலம் விசாகப்பட்டினத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை நடைபெற்ற சர்வதேச கப்பற்படை அணிவகுப்பு  மற்றும் மிலன் 2026 ஆகிய பன்னாட்டு கடற்படைப் பயிற்சிகளில் பங்கேற்றது. அதன்படி இப்பயிற்சிகளை முடித்துவிட்டு ஈரான் நோக்கித் திரும்பிக் கொண்டிருக்கும் போது தாக்குதலுக்கு உள்ளானது. ஈரான் அரசு இச்சம்பவத்தை கடலில் நிகழ்த்தப்பட்ட கொடூரம் என்று தெரிவித்துள்ளது. அதோடு நட்பு ரீதியாக இந்தியாவுக்கு விருந்தினராக வந்த கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளதாகக் கண்டனம் தெரிவித்துள்ளது.

Advertisment

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று எதிரி நாட்டின் கப்பலைத் தார்ப்பிடோ (நீருக்கு அடியில் இயங்கும் ஒரு சுய இயக்க வெடிகுண்டு - Self-propelled explosive) மூலம் மூழ்கடிப்பது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது. இந்தியாவின் பாதுகாப்பில் உள்ள கடல் பகுதியில் இச்சம்பவம் நடந்திருப்பது, இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய செல்வாக்கிற்கு விடப்பட்ட சவாலாக எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்படுகிறது. இந்நிலையில் இது தொடர்பாக  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளா பதிவில், “அமெரிக்கா வெறும் 30 நாட்களுக்கு மட்டும் ரஷ்ய எண்ணெயை வாங்க இந்தியாவிற்கு அனுமதி அளிக்க முடிவு செய்யும் போது, ஒரு அடிப்படை கேள்வி எழுகிறது. 

irish-dena

இந்தியாவின் சொந்த எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்ய மற்றொரு நாட்டின் ஒப்புதல் இந்தியாவிற்கு ஏன் தேவைப்பட வேண்டும்?. அதேபோல், விசாகப்பட்டினத்தில் இந்தியா நடத்திய 2026 சர்வதேச கப்பற்படை அணிவகுப்பில் பங்கேற்ற சிறிது நேரத்திலேயே, ஆயுதமற்ற ஈரானிய போர்க்கப்பலான ஐரிஸ் டெனாவை அமெரிக்கா மூழ்கடித்தது கவலையளிக்கிறது. ஒரு பன்னாட்டுப் பயிற்சியின் அங்கமாக இந்தியாவிற்கு வந்த கப்பலுக்கு இத்தகைய நிலை ஏற்படும் போது, இந்தியா மௌனமாகவோ அல்லது செயலற்றதாகவோ இருக்க முடியாது. 

இந்தியாவின் நீண்டகால பாரம்பரியமான உத்திசார் தன்னாட்சி மற்றும் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையில் மத்திய பாஜக அரசு முற்றிலும் சமரசம் செய்துகொண்டது போல் தெரிகிறது. சர்வதேச அரங்கில் இந்தியாவின் கண்ணியம் பாதுகாக்கப்பட வேண்டும், தேசத்தின் இறையாண்மை மற்றும் நலன்கள் தற்காக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். மற்றொருபுறம் அமெரிக்க அரசு, இந்திய நிறுவனங்கள் ரஷ்யாவின் கச்சா எண்ணெயை வாங்குவதற்கு 30 நாட்களுக்கு தற்காலிக விலக்கு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

union govt usa America iran ship
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe