சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ஆண்டுதோறும் புத்தகக் கண்காட்சி நடைபெறும். தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) சார்பில் நடத்தப்படும் இந்த புத்தகக் கண்காட்சியில் கடந்த 2025ஆம் ஆண்டு மட்டும் ரூ.20 கோடிக்கு மேல் புத்தக விற்பனை நடைபெற்றது. இவ்வாறாக ஒவ்வொரு ஆண்டும் வாசகர்களிடமும் , பொதுமக்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது இந்த புத்தகக் கண்காட்சி. 

Advertisment

அதன்படி வழக்கம் போல இந்த ஆண்டும் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் 49வது புத்தகக் கண்காட்சி ஜனவரி 08 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 21ஆம் தேதி வரை 21 நாட்கள்  நடைபெறும் என பபாசி அமைப்பினால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புத்தக் காட்சியை இன்று (08.01.2026) தொடங்கி வைத்தார்.அதோடு தற்காலிக திருவள்ளுவர் சிலையையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.  அதனைத் தொடர்ந்து கலைஞர் பொற்கிழி விருதுகளையும் எழுத்தாளர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.  

Advertisment

அப்போது அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,  மா.சுப்பிரமணியன், நக்கீரன் ஆசிரியர் உள்ளிட்ட பபாசி நிர்வாகிகள் உடன்  இருந்தனர். இந்த புத்தக் கண்காட்சியில் 1000க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இலவச நுழைவு டிக்கெட்டுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புத்தக் கண்காட்சி காலை 11 மணி முதல் இரவு 08:30 மணி வரை இயங்க உள்ளது. 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. வாசகர்களின் வசதிக்காக 15 ஏ.டி.எம்.கள் நிறுவப்பட்டுள்ளன. மேலும் புத்தகக் கண்காட்சியில் தினமும் மாலையில் அறிஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளனர்.