திருவள்ளூர் மாவட்டம் செம்பரம்பாக்கத்தில், சென்னை மாநகருக்கு செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கூடுதலாக நாளொன்றுக்கு 265 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (20.9.2025) தொடங்கி வைத்தார். நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் 66 கோடியே 78 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதனைத் தொடர்ந்து செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
முன்னதாக செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், பூந்தமல்லியைச் சார்ந்த எட்டாம் வகுப்பு மாணவி பிரக்யா ஜெயின் என்பவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்திக்க வேண்டும் என்று கடிதம் அளித்தார். இதனையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மாணவியை தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அதைத்தொடர்ந்து, இன்று (21.09.2025) அம்மாணவியை நேரில் வரவழைத்து உரையாடினார். அப்போது மாணவி பிரக்யா ஜெயினுக்கு திருக்குறள் புத்தகத்தை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.