தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அண்மையில் மேற்கொண்ட ஜெர்மன், இலண்டன் பயணங்கள் குறித்தும், திராவிட மாடல் அரசின் புதிய திட்டங்கள் குறித்தும் மக்களுடன் ஸ்டாலின் என்ற செயலியில் அனுப்பப்பட்டிருந்த கேள்விகளுக்கு உங்களில் ஒருவன் பதில்கள் மூலம் பேட்டி அளித்துள்ளார். அது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. அதில், “தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என்று எதற்கு சொல்கிறீர்கள்?”என்ற கேள்விக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். 

Advertisment

அதில், “பா.ஜ.க. எப்படியெல்லாம் தமிழ்நாட்டை குறி வைத்திருக்கிறார்கள் என்று முப்பெரும் விழாவில் பேசும்போதே சொல்லியிருந்தேன். அவர்களால் நேராக நுழைய முடியவில்லை என்று அ.தி.மு.க.வுடன் சேர்ந்துகொண்டு, என்னென்ன செய்கிறார்கள் என்று எடுத்துச் சொல்லியிருந்தேன். தொகுதி மறுவரையறை, நீட்,  எஸ்.ஐ.ஆர். (S.I.R.), கல்வி நிதி மறுப்பு, இந்தி திணிப்பு, கீழடி அறிக்கையை மறைப்பது என்று இந்த லிஸ்ட் பெரிதாக இருக்கிறது. இதையெல்லாம் பொதுமக்களிடம் எடுத்துச் சொல்லி கடுமையாக எதிர்ப்பதால்தான் தி.மு.க.வை டார்கெட் செய்கிறார்கள். அவர்கள் கூட்டணிக்குள்ளேயே பல குழப்பங்கள் இருந்தாலும், தி.மு.க. வந்துவிடக் கூடாது என்று குறியாக இருக்கிறார்கள். பா.ஜ.க.வை எதிர்ப்பதாக வெளியில் நிறைய பேர் சொல்லிக்கொள்ளலாம். ஆனால், அனுபவம், வலிமை, கொள்கைத் தெளிவுடன் பா.ஜ.க.வை தடுத்து நிறுத்தும் ஆற்றல் தி.மு.க.விடம் மட்டும்தான் இருக்கிறது.

இது தமிழ்நாட்டு மக்களுக்கும் நன்றாகத் தெரியும். அதனால்தான். தி.மு.க. ஆட்சி நீடித்தால்தான் தமிழ்நாடு இதேபோன்று, தொடர்ந்து தலைநிமிர்ந்து நடக்க முடியும் என்று தெளிவாக இருக்கிறார்கள். 'ஓரணியில் தமிழ்நாடு' பரப்புரை முன்னெடுப்பில். ஒரு கோடிக்கும் அதிகமான குடும்பங்கள் இணைந்திருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் சேர்த்து, தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என்று உறுதிமொழி எடுத்திருக்கிறோம். தமிழ்நாட்டு மக்கள் அனைவரின் மனதிலும் இருக்கும் உணர்வை தான் முப்பெரும் விழாவிலும் வெளிப்படுத்தி இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.