சென்னை நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில், தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் யூமேஜின் தமிழ்நாடு -2026 (Umagine TN-2026) தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (08.01.2026) தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்து, பார்வையிட்டார். இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றுகையில், “நீங்கள் எல்லோரும் ஆச்சரியப்படுவது போன்று ஒரு டேட்டாவை சொல்கிறேன். தமிழ்நாட்டில் இருக்கும் 38 மாவட்டங்களில், 32 மாவட்டங்களில் இருந்து மென்பொருள் ஏற்றுமதி நடைபெறுகிறது என்று ஒன்றிய அரசின் எஸ்.டி.பி.ஐ. (STPI) வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. 

Advertisment

திராவிட மாடல் என்றால் என்ன? என்று கேட்பவர்களுக்கு ஒன்றிய அரசு சொல்லும் இந்த தரவுதான் என்னுடைய பதில். தமிழ்நாட்டின் புத்தாக்க சூழலும், இந்தியாவிலேயே சிறந்த ஒன்றாக இருக்கிறது. பெரும் ஐ.டி. மற்றும் பொறியியல் மனிதவளம், உலகத் தர கல்வி நிறுவனங்கள், பல சிறப்பு மையங்கள், இந்தியாவின் முதலாவது டீப் டெக் இன்குபேட்டர் எல்லாம் இணைந்து, ஆராய்ச்சியில் இருந்து அறிவுசார் சொத்துகள் உருவாக்கம், உலகச் சந்தை அடைவு வரை முழுமையான பயணத்தை சாத்தியமாக்கி இருக்கிறது. இதன் ரிசல்ட் தான். இந்தியாவில் பதிவாகும் நான்கில் ஒரு காப்புரிமை அதாவது 'பேட்டண்ட்' விண்ணப்பம் தமிழ்நாட்டில் இருந்து பதிவாகும் வகையில் நாம் முன்னணியில் இருக்கிறோம். நிதி, நில நிர்வாகம், காவல், மருத்துவம், கல்வி உள்ளிட்ட துறைகளில் கோடிக்கணக்கான பரிவர்த்தனைகளை கையாளும் மாநில அளவிலான டிஜிட்டல் தளங்கள் ஆகியவை மக்கள் அளவிலான டிஜிட்டல் நிர்வாகம் நடைமுறையில் சாத்தியமானது என்று நிரூபிக்கிறது. 

Advertisment

இது எல்லாவற்றிற்கும் எது மையக் காரணம் என்றால், நம்முடைய ஆற்றல்மிக்க மனிதவளம்தான். இதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று தான்,  ஏ.ஐ. சந்தாவுடன் கல்லூரி மாணவர்களுக்கு லேட்டஸ்ட் மாடல் லேப்டாப்களை 'உலகம் உங்கள் கையில்' என்று அந்தத் திட்டத்தின் மூலமாக வழங்கியிருக்கிறோம். இதை செலவு என்றோ, இலவசம் என்றோ நாங்கள் கருதவில்லை. தொழில்நுட்பம் எல்லோருக்கும் சமமாக கிடைப்பதற்கு எதிர்காலத்தை நோக்கிய முதலீடாகதான் இதை பார்க்கிறோம். அந்த வகையில் நம்முடைய கனவுகளுக்கு சிறகுகளை வழங்குவது போல, தொழில்நுட்பம், தரவுப் பொருளாதாரம், டிஜிட்டல் நிர்வாகம், புத்தொழில் நிறுவனங்கள், உலகளாவிய திறன் மையங்கள் ஆகிய அனைத்தையும் ஒரே மேடையில் இந்த (UMAGINE TN) மாநாடு ஒருங்கிணைத்திருக்கிறது. 

Umagine-TN-2026-mks-speak-1

தமிழ்நாட்டின் இலக்குகள் தெளிவானது. புது யுகத்தின் டெக்னாலஜியில் தமிழ்நாடுதான் டாப்-இல் இருக்க வேண்டும். ஆனால், அந்த வளர்ச்சியில் யாரும் விட்டுப்போக கூடாது. அறிவானாலும், தொழில்நுட்பமானாலும் எல்லோருக்குமானதாக அது இருக்க வேண்டும். அப்படி ஒரு வருங்காலத்தை தான் நம்முடைய இளைய தலைமுறைக்காக திராவிட மாடல் அரசு கட்டி எழுப்பி வருகிறது” எனத் தெரிவித்தார். இந்நிகழ்வில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் எனப் பலரும் கலந்து உள்ளனர்.

Advertisment