எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 1ஆம் தேதி உலக எய்ட்ஸ் நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், உலக எய்ட்ஸ் நாள் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், “1986ஆம் ஆண்டு சென்னையில் முதன் முதலாக எச்.ஐ.வி தொற்று கண்டறியப்பட்ட நாள் முதல், இன்று வரை தமிழ்நாடு அரசு, எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு பணியில் கடந்து வந்த 39 ஆண்டு காலப் பணியானது மிக நெடியதும், வெற்றிகரமானதும் ஆகும்.

Advertisment

புதிய எச்.ஐ.வி தொற்றினை முற்றிலும் தடுக்கும் விதமாக மாநில அரசின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம், அரசு சாரா தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து எச்.ஐ.வி தடுப்பு பணியினை திறன்பட செயல்படுத்தியமையால், தமிழ்நாட்டில் எச்.ஐ.வி தொற்றின் தாக்கம் 2002ஆம் ஆண்டில் 1.11 என்ற விழுக்காட்டிலிருந்து, 2023-24ஆம் நிதியாண்டில் 0.16 என்ற விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது தேசிய அளவின் சராசரியான 0.23 விழுக்காட்டை விடக் குறைவானதாகும். ஆண்டுதோறும் டிசம்பர் திங்கள் முதல் நாள் உலக எய்ட்ஸ் தினமாக அனுசரிக்கப்படுகிறது. 

Advertisment

இவ்வாண்டிற்கான உலக எய்ட்ஸ் தினத்தின் மையக்கருத்து, (Overcoming disruption, transforming the AIDS response) இடையூறுகளைக் கடந்து எச்.ஐ.வி., எய்ட்ஸ் தொடர்பான எதிர்வினைகளை மாற்றுதல் ஆகும். அதாவது, உலக அளவில் எச்.ஐ.வி., எய்ட்ஸ் தொடர்பான தடுப்பு நடவடிக்கைகள் உயர்ந்துள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் எய்ட்ஸை முடிவுக்கு கொண்டு வருவதற்கான இலக்கினை அடையும் வகையில், இன்றைய சூழலைக் கருத்தில் கொண்டு அபாயங்களைக் குறைப்பதற்கு, ஒரு மாற்று அணுகுமுறை தேவை என்பதாகும். தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் மூலமாக, எச்.ஐ.வி தொற்றைக் கண்டறிய 2.600 நம்பிக்கை மையங்களும், எச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்க 81 கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்களும், 172 இணை கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்களும் செயல்பட்டு வருகின்றன. 

tn-sec

எச்.ஐ.வி தொற்றுள்ள பெற்றோரிடமிருந்து கருவிலுள்ள குழந்தைகளுக்கு நோய் பரவாமல் தடுத்திட அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கும் எச்.ஐ.வி மற்றும் சிபிலிஸ் பரிசோதனையினை அரசு மருத்துவமனைகளில் செயல்படும் நம்பிக்கை மையங்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமூக அடிப்படையிலான அமைப்புகளுடன் இணைந்து நகர்ப்புறங்களில் அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள இலக்கு மக்களுக்கான (MSM, FSW. IDU. திருநங்கைகள் & புலம் பெயர்ந்தோர்) திட்டங்களை, 87 அரசு சாரா நிறுவனங்கள் செயல்படுத்தி வருகிறது.

Advertisment

தமிழ்நாடு அரசு 2025-26ஆம் நிதியாண்டில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக்கோரிக்கையில், எச்.ஐ.வி- எய்ட்ஸ் தொற்றுக்கு உள்ளான மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து. கல்வி மற்றும் மருத்துவ தேவைகளுக்கு நிதி உதவியாக மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலமாக 7 ஆயிரத்து 618 குழந்தைகளுக்கு மாதாந்திர நிதி உதவி வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிதியாண்டில் (2025-26) மாவட்ட அளவில் ஒருங்கிணைந்த தன்னார்வ பரிசோதனை முகாம்கள் (Integrated Health Campaign) ஏற்படுத்தி, எச்.ஐ.வி தொடர் சங்கிலி தொற்றினை  கண்காணித்து (Index Case Finding and Testing) எச்.ஐ.வி தொற்றுள்ளோரின் பாலியல் பங்காளர்கள் அவர்களின் துணைவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு தீவிர பரிசோதனை முகாம்கள் (Index testing campaign) மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகுகளின் மூலம் நடத்தப்பட்டு வருகிறது.

aids-ref

தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம். இந்த ஆண்டில் சர்வதேச இளைஞர் தினத்தினை முன்னிட்டு மாநில மற்றும் மாவட்ட அளவில் எச்.ஐ.வி, எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த ஆகஸ்ட் 12 முதல் அக்டோபர் 12,  2025 வரையிலான நாட்களில் சுமார் 2.30 இலட்சம் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் தீவிர விழிப்புணர்வு பிரச்சார சேவையினை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு செஞ்சுருள் சங்கங்களின் (Red Ribbon Clubs) வாயிலாக, எச்.ஐ.வி/எய்ட்ஸ் விழிப்புணர்வு மற்றும் பால்வினை நோய் தொற்று குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் புதிய எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொற்று இல்லாத நிலையினை உருவாக்கிட உறுதியேற்று, எச்.ஐ.வி தொற்றுடன் நிலையினை வாழும் மக்கள் ஒவ்வொருவரும் சம வாய்ப்புடன். தகுந்த மரியாதை மற்றும் மதிப்புடன் நடத்தி எவ்வித பாகுபாடும், ஒதுக்குதலுமின்றி அவர்களுக்கு அன்பையும் ஆதரவையும் அளிக்க வேண்டும் என நான் உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.