நாட்டின் மிக உயர்ந்த குடிமையியல் (சிவில்) விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள், பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ என மூன்று பிரிவுகளில் வழங்கப்படுகின்றன. கலை, சமூகப் பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, குடிமைப் பணி போன்ற பல்வேறு துறைகள் மற்றும் அதன் செயல்பாடுகளில் சிறந்து விளங்குவோருக்கு இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன.

Advertisment

அதிலும் குறிப்பாகத் தனித்துவம் (விதிவிலக்கான - exceptional) மற்றும் சிறப்புமிக்க சேவைக்காக ‘பத்ம விபூஷண்’ விருது வழங்கப்படுகிறது. சிறந்த சேவைக்காக ‘பத்ம பூஷண்’ விருதும், எந்தவொரு துறையிலும் சிறந்த சேவைக்காக 'பத்மஸ்ரீ' விருதும் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று இவ்விருதுகள் அறிவிக்கப்படுகின்றன. இந்த விருதுகள் இந்தியக் குடியரசுத் தலைவரால் ஆண்டுதோறும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் ராஷ்டிரபதி பவனில் (குடியரசுத் தலைவர் மாளிகையில்) நடைபெறும் விழாவில் வழங்கப்படுகின்றன. அதன்படி 2026ஆம் ஆண்டிற்கு, 131 பத்ம விருதுகளை வழங்கக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.

Advertisment

இந்தப் பட்டியலில் 5 பத்ம விபூஷண், 13 பத்ம பூஷண் மற்றும் 113 பத்மஸ்ரீ விருதுகள் உள்ளன. விருது பெறுபவர்களில் 19 பேர் பெண்கள், வெளிநாட்டினர் பட்டியலில் (என்ஆர்ஐ / பிஐஓ / ஓசிஐ) பிரிவைச் சேர்ந்த 6 பேரும் அடங்குவர். மேலும் 16 பேருக்கு மறைவுக்குப் பின் இவ்விருதுகள் வழங்கப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 13 பேருக்கும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதாவது காயத்ரி பாலசுப்ரமணியன், ரஞ்சனி பாலசுப்ரமணியன் ஆகிய இருவருக்கும் ஒரு விருதாளராக கருதப்படுவார்கள். இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த பத்ம விருதாளர்களுக்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

padma-award-2026

இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாட்டில் இருந்து பத்ம பூஷன் விருது பெறத் தேர்வாகியிருக்கும் ராமசாமி பழனிசாமி,மயிலானந்தன் ஆகியோருக்கும். பத்ம ஸ்ரீ விருது பெறத் தேர்வாகியிருக்கும் எச்.வி. ஹண்டே, சிவசங்கரி, காயத்ரி பாலசுப்ரமணியன் மற்றும் ரஞ்சனி பாலசுப்ரமணியன், ராமசாமி, விஜயகுமார், ஓதுவார் திருத்தணி சுவாமிநாதன், புண்ணியமூர்த்தி நடேசன், ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், திருவாரூர் பக்தவத்சலம், வி. காமகோடி ஆகியோருக்கும் எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Advertisment

தங்களது துறைகளில் தாங்கள் தொடர்ந்து சாதனைகளைப் படைத்து, சமூகத்துக்குச் சேவையாற்றிட இந்த அங்கீகாரம் ஊக்கத்தினை வழங்கிடும் என நம்புகிறேன். பத்ம பூஷன் பெறவுள்ள டென்னிஸ் வீரரும் எனது நண்பருமான விஜய் அமிர்தராஜ், திரைக்கலைஞர் மம்மூட்டி, பதம ஸ்ரீ விருது  பெறவுள்ள நடிகர் ஆர். மாதவனுக்கும் எனது சிறப்பு வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.