பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான ‘செவாலியர்’ விருது உலகின் பல பகுதிகளில் கலை, இலக்கியம் மற்றும் அறிவியலில் சிறந்து விலங்கும் கலைஞர்களை கௌரவப்படுத்தும் விதமாக பிரான்ஸ் அரசாங்கம் வழங்கி வருகிறது. 1957ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வழங்கி வரும் இவ்விருதை தமிழ் சினிமாவில் நடிகர்கள் சிவாஜி கணேசனுக்கு 1995ஆம் ஆண்டும் கமல்ஹாசனுக்கு 2016ஆம் ஆண்டும் வழங்கப்பட்டது. 

Advertisment

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான செவாலியர் விருது அறிவிக்கப்பட்டது. அதில் திரைப்பட கலை இயக்குநர் தோட்டா தரணிக்கு இவ்விருது அறிவிக்கப்பட்டது. நவம்பர் 13ஆம் தேதி சென்னையில் உள்ள அலையன்ஸ் பிரான்சைஸ் வளாகத்தில் இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் தியெரி மாத்தோ, இந்த விருதை தோட்டா தரணிக்கு வழங்க உள்ளார். அதே வளாகத்தில் கடந்த சில நாள்களாக தோட்டா தரணியின் ஓவியக் கண்காட்சியும் நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது. 

Advertisment

இந்திய சினிமாவில் புகழ்பெற்ற கலை இயக்குநராக வலம் வருபவர் தோட்டா தரணி. இந்தியாவை தாண்டி ஹாலிவுட் படங்களிலும் இவர் பணியாற்றியுள்ளார். தமிழில் இவர் பணியாற்றிய நாயகன், இந்தியன், தளபதி, சந்திரமுகி, சிவாஜி, தசாவதாரம், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல படங்களின் கலை அமைப்புகள் தத்ரூபமாகவும் பிரம்மாண்டமாகவும் இடம்பெற்று ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. நாயகன் மற்றும் இந்தியன் படத்திற்காக தேசிய விருதை இவர் வென்றிருந்தார். மேலும் இவரது பணியை கௌரவித்து 2001ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும் மத்திய அரசு வழங்கியது. 

இந்நிலையில் தோட்டா தரணிக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை  தெரிவித்து வருகின்றனர்.  அந்த வகையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள  வாழ்த்துச் செய்தில், “ஆக்ஸ்போர்டுவில் ஒளிரும் தந்தை பெரியாரின் ஓவியத்தைத் தந்து நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தோட்டா தரணிக்கு, பிரான்சு அரசின் உயரிய அங்கீகாரமான செவாலியர் விருது அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியுள்ளது. அரசு கவின் கலைக் கல்லூரியில் பயின்ற தோட்டா தரணி, இந்தியாவில் இருந்து இவ்விருது பெற்ற மிகப்பெரும் ஆளுமைகளின் வரிசையில் இணையவுள்ளது பெருமையளிக்கிறது. பார் போற்றும் உங்கள் சாதனைக்குப் பாராட்டுகள்” எனத் தெரிவித்துள்ளார்.  

Advertisment