சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் உதவிப் பொறியாளர், இளநிலைப் பொறியாளர், தொழில்நுட்ப உதவியாளர், வரைவாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட 2 ஆயிரத்து 538 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (06.08.2025) நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், “ இளைஞர்களுக்கு என்னவெல்லாம் தேவையோ அதையெல்லாம் அரசு வழங்கிக்கொண்டு இருக்கிறது.
அதில் முக்கியமாகச் சிலவற்றைச் சொல்ல வேண்டும் என்றால், 41 இலட்சம் பேர் நான் முதல்வன் திட்டத்திலும் 4 இலட்சம் மாணவர்கள் தமிழ்ப்புதல்வன் திட்டத்திலும் 6 இலட்சம் மாணவிகள் புதுமைப்பெண் திட்டத்திலும் பயனடைந்திருக்கிறார்கள். பல்வேறு மாவட்டங்களில் தோழி விடுதிகள் தொடங்கியிருக்கிறோம். இப்படி, கல்வியைச் சுற்றியும், அறிவைச் சுற்றியும் ஆற்றலைச் சுற்றியும் செயல்படக்கூடிய முன்னெடுப்புகளின் வரிசையில், அடுத்து, கல்லூரியில் படிக்கும் 20 இலட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் தரப்போகிறோம். பொதுவாக, நான் மாணவர்களிடம் பேசும்போது, ‘கல்விதான் யாராலும் திருட முடியாத சொத்து’ என்று சொல்லி அவர்களை ஊக்குவிப்பேன்.
அப்படிப்பட்ட கல்விச் செல்வத்தைப் பெற்று, முன்னேற்றத்திற்கான முதல் படியில் காலடி வைக்கும் இளைஞர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது, நாள்தோறும் உலகம் அப்டேட் ஆகிக்கொண்டிருக்கிறது. அதற்கு நிகராக இளைஞர்களும் அப்கிரேடு ஆக வேண்டும். தேக்கம் என்பதே உங்களின் கரியரில் (career) இருக்கக் கூடாது. அதற்கு ஏற்றது போலத் திறனை மேம்படுத்திக்கொள்ளுங்கள். உங்களுக்கு உதவி செய்ய நாங்கள் இருக்கிறோம்” எனப் பேசினார். இந்நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என். நேரு, .தா.மோ. அன்பரசன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.