மிக முக்கியமான ஒரு பொருண்மை குறித்து முதல்வர் ஸ்டாலினின் காணொளி ஒன்று அரசு தரப்பில் வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த காணொளியில் பேசும் முதல்வர் ஸ்டாலின், " இன்று காலை நமது அரசின் சார்பாக ரூபாய் 5,000 உங்கள் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இத்தொகை எதற்காக வழங்கப்படுகிறது? நாம் ஆட்சிப் பொறுப்பேற்றபோது கொரோனா பெருந்தொற்று உச்சத்தில் இருந்தது. அதனைச் சமாளித்து மக்களின் உயிரைக் காத்ததோடு மட்டுமல்லாமல், அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க ரூபாய் 4,000 நிவாரணத் தொகையும் வழங்கப்பட்டது. முந்தைய ஆட்சி விட்டுச் சென்ற கடுமையான நிதி நெருக்கடியைச் சமாளித்து, ஆட்சிக்கு வந்ததுமே பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினோம். நாம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்தேன்.
அப்போது இது சாத்தியமற்றது என்று சிலர் கூறினர். இருப்பினும் நிதி நெருக்கடியைச் சமாளித்து, ஒன்றிய அரசின் பாரபட்சத்தையும் மீறி, கடந்த 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறோம். தொடக்கத்தில் ஒரு கோடியே 13 லட்சம் மகளிருக்கு பயனளித்த இத்திட்டம், அண்மையில் விரிவுபடுத்தப்பட்டு தற்போது ஒரு கோடியே 31 லட்சம் குடும்பத் தலைவிகள் பயன்பெற்று வருகிறார்கள். இது வெறும் நிதி உதவி மட்டுமல்ல; சமூகத்தில் பெண்கள் ஆற்றும் பங்களிப்பை அங்கீகரிப்பதற்காக வழங்கப்படும் உரிமைத் தொகையாகும். இத்தொகையைக் கொண்டு அன்றாட இல்லச் செலவுகள், குடும்ப உறுப்பினர்களின் மருத்துவச் செலவுகள், குழந்தைகளின் கல்விச் செலவுகள் எனப் பல அத்தியாவசியத் தேவைகளை மகளிரே நிறைவு செய்ய இத்திட்டம் வழிவகுத்தது.
அதன் காரணமாகவே ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதியை அனைத்துக் குடும்பத் தலைவிகளும் ஆவலோடு எதிர்பார்க்கும் நாளாக இது அமைந்துள்ளது. இச்சிறப்பு வாய்ந்த திட்டத்தை மற்ற மாநிலங்களும் பின்பற்றி வருகின்றன. நாம் இந்த உரிமைத் தொகையை மேம்படுத்த முனைந்து வரும் வேளையில், அதற்கு எதிராகத் டெல்லியில் உள்ள ஒரு கூட்டமும், தமிழ்நாட்டில் அவர்களுக்கு அடிபணிந்து நடக்கும் மற்றொரு கூட்டமும், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலைக் காரணம் காட்டி அடுத்த மூன்று மாதங்களுக்கு இந்த மகளிர் உரிமைத் தொகையை நிறுத்தச் சூழ்ச்சி செய்வதாகத் தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவும் சிலர் முயற்சிப்பதாகச் செய்திகள் வருகின்றன.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/13/mks-8-2026-02-13-10-20-58.jpg)
இந்தத் திட்டத்தை மூன்று மாதங்களுக்கு நிறுத்தி வைத்தால் நீங்கள் எத்தகைய சிரமங்களுக்கு உள்ளாவீர்கள் என்பதை உங்கள் குடும்பத்தில் ஒருவனாக நான் நன்கு அறிவேன். கடுமையான வெயிலில் பணிக்குச் செல்ல இயலாத கோடை காலத்தில் இப்பணம் நிறுத்தப்பட்டால் உங்களுக்கு ஏற்படும் இடரை என்னால் உணர முடிகிறது. உங்கள் மாதாந்திரச் செலவுகளை எவ்வாறு சமாளிப்பீர்கள்? நோய்வாய்ப்பட்டவர்களுக்குத் தேவையான மருந்துகளை வாங்கவோ அல்லது குழந்தைகளின் தேர்வுக் காலங்களில் அவர்களுக்கான கல்விச் செலவுகளைச் செய்யவோ இயலுமா?
இக்கஷ்டங்களை எல்லாம் கருத்தில் கொண்டே ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளேன். அதன்படி, இந்த பிப்ரவரி மாதம் மட்டுமல்லாமல் அடுத்த இரண்டு மாதங்களுக்கான (மார்ச், ஏப்ரல்) உரிமைத் தொகைத் தவணைகளைச் சேர்த்து 3,000 ரூபாயும், கூடுதலாகக் கோடைக்காலச் செலவுகளுக்காக 2,000 ரூபாய் சிறப்புத் தொகையும் சேர்த்து, மொத்தம் 5,000 ரூபாயைச் சிறப்பு மகளிர் உரிமைத் தொகையாக ஒரு கோடியே 31 லட்சம் பெண்களுக்கு வழங்க உத்தரவிட்டுள்ளேன். இந்தத் தருணத்தில் மற்றுமொரு வேண்டுகோள்; இந்த 5,000 ரூபாயை அடுத்த மூன்று மாதங்களுக்கு நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதால் கவனமாகச் செலவிடுங்கள், இயன்றவரை சேமிக்கவும் முயலுங்கள். அன்புச் சகோதரிகளே, உங்கள் ஆதரவோடு அடுத்து அமையவிருப்பதும் திராவிட மாடல் ஆட்சிதான்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/13/cm-mks-6-2026-02-13-10-21-15.jpg)
அடுத்த திராவிட மாடல் 2.0 ஆட்சிக் காலத்தில் உங்களுடைய உரிமைத் தொகை 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். சொன்னதைச் செய்யும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் வழங்கும் வாக்குறுதி இது. கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாடு அடையாத பொருளாதார வளர்ச்சியை இந்தியாவே வியக்கும் வகையில் நாம் சாதித்துக் காட்டியுள்ளோம். எனவே எந்தத் தடை வந்தாலும் அவற்றைக் கடந்து தமிழ்நாடாக ஒன்றிணைந்து வெல்வோம்" என்று பேசியிருக்கிறார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/13/mks-9-2026-02-13-10-20-17.jpg)