பிரபல மருத்துவ நிபுணரும், ‘பத்மஸ்ரீ’ விருதாளருமான மாதங்கி ராமகிருஷ்ணன் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “புகழ்பெற்ற ஒட்டுறுப்பு அறுவை (Plastic Surgery) மருத்துவர் 'பத்மஸ்ரீ' மாதங்கி யாமகிருஷ்ணன் மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன்.
மாதங்கி ராமகிருஷ்ணன் சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பு பயின்று முடிக்கும்போதே தங்கப்பதக்கங்கள் முதலிய ஏராளமான பதக்கங்களோடு பட்டம் பெற்ற சிறப்புக்குரியவர் ஆவார். ஒட்டுறுப்பு அறுவை மருத்துவத்தில் முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களைப் பெற்ற மாதங்கி ராமகிருஷ்ணன் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் (KMC) தீவிர தீப்புண் சிகிச்சைப் பிரிவு தொடங்கப்படுவதில் முதன்மையான பங்காற்றியவர் என்பது அவரது சாதனைகளில் குறிப்பிடத்தக்கது. தனது மருத்துவப் பணிகளுக்கான அங்கீகாரமாக பத்மஸ்ரீ, டாக்டர் பி.சி. ராய் விருது, தமிழ்நாடு அரசின் அவ்வையார் விருது முதலிய பல்வேறு விருதுகளை மாதங்கி ராமகிருஷ்ணன் பெற்றுள்ளார்.
கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் துறைத் தலைவர், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மிகைநிலைப் பேராசிரியர், மத்தியத் தோல் ஆராய்சி நிறுவனத்தில் (CLRI) மிகைநிலை அறிவியலாளர் உள்ளிட்ட பல பொறுப்புகளில் திறம்படச் செயல்பட்ட மாதங்கி ராமகிருஷ்ணன், தீப்புண் காயங்களால் பாதிக்கப்பட்ட மக்களின் சிகிச்சைக்காகவே தன் வாழ்க்கையின் பெரும்பகுதியைச் செலவிட்டு மானுடத்திற்குப் பெரும் தொண்டாற்றியுள்ளார். சேவையும், அறிவியல் நோக்கும் நிறைந்த வாழ்க்கையினால் பலருக்கு உதவிய மாதங்கி ராமகிருஷ்ணனை இழந்து தவிக்கும் அவரது மகள் ப்ரியா உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், மருத்துவத்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Follow Us