கடவுள் இயேசு கிறித்துவின் பிறப்பைக் குறிக்கும் டிசம்பர் 25 ஆம் தேதி உலகம் முழுவதும் இன்று (25-12-25) கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையோட்டில் குடியரசுத் தலைவர், பிரதமர், அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த பண்டிகையையொட்டி, மால்கள் மற்றும் பிற பொது இடங்களில், இசை நிகழ்ச்சிகள், கார்னிவல்கள் மற்றும் பரிசுப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் உள்ள மேக்னெண்ட்டோ மாலில் கிறிஸ்துமஸ் குடில்கள், சாண்டா பொம்மைகள் உள்ளிட்ட அலங்கராங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், இந்து அமைப்பான பஜ்ரங் தள் என்ற அமைப்பினர், மேக்னெட்டோ மாலில் இடம்பெற்ற கிறிஸ்துமஸ் அலங்காரப் பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ளனர். மேலும் அப்பகுதியில் உள்ள கடைகளில் இருந்த கிறிஸ்துமஸ் பொருட்களையும் அடித்து நொறுக்கினர். சட்டவிரோத மதமாற்றங்களுக்கு எதிராக மாநிலம் தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்த இந்து அமைப்பினர், கிறிஸ்துமஸ் அலங்காரப் பொருட்களை அடித்து நொறுக்கிய சேதப்படுத்தியிருப்பது பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “சிறுபான்மையினர் அச்சமின்றி வாழத் துணையிருப்பதில்தான் பெரும்பான்மையினரின் பலமும் இருக்கிறது, குணமும் இருக்கிறது. பெரும்பான்மை என்ற பெயரில் சில வலதுசாரி வன்முறைக் கும்பல்கள் தாக்குதல்களிலும் கலவரங்களிலும் ஈடுபடுவது, அதுவும் பிரதமர் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கெடுக்கும்போதே ஈடுபடுவது, நாட்டு மக்களுக்குத் தவறான செய்தியையே கொண்டு சேர்க்கும். மணிப்பூர் கலவரங்களைத் தொடர்ந்து, இப்போது ஜபல்பூர் - ராய்பூர் மற்றும் பிற இடங்களிலும் சிறுபான்மையினர் மீது தாக்குதல் என்பதை நல்லிணக்கத்தை விரும்பும் நாட்டு மக்கள் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
ஒன்றிய பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு, சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள் 74% அதிகரித்திருப்பதாகச் சொல்லப்படும் புள்ளிவிவரங்கள், எதிர்காலம் எதிர்நோக்கியுள்ள ஆபத்துகளை உணர்த்துகிறது. எனவே, நாட்டுமக்களைப் பிளவுபடுத்திக் குளிர்காய நினைக்கும் கலவரக் கும்பல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கிட வேண்டியது நம் அனைவரது பொறுப்பும் கடமையுமாகும்” என்று தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/25/mkraipur-2025-12-25-14-25-58.jpg)