‘தி வயர்’ எனும் பத்திரிகை நிறுவன ஆசிரியர் சித்தார்த் வரதராஜன் மற்றும் மூத்த பத்திரிகையாளர் கரண் தாப்பர் ஆகியோர் மீது அசாம் காவல்துறை பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) கீழ் பதிவு செய்து ஆகஸ்ட் 22ஆம் தேதி குவஹாத்தியில் உள்ள குற்றப்பிரிவு முன்பு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது.
பிரிவு 152 (இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை ஆபத்தில் ஆழ்த்துதல்), பிரிவு 196 (மதம், இனம், மொழி போன்றவற்றின் அடிப்படையில் குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல்), பிரிவு 1971 (தேசிய ஒருங்கிணைப்புக்கு பாதகமான குற்றச்சாட்டுகள்), பிரிவு 353 ( பொது குழப்பத்திற்கு வழிவகுக்கும் அறிக்கைகள், பிரிவு 45 (துன்புறுத்தல்) மற்றும் பிரிவு 61 (குற்றச்சதி) ஆகியவற்றின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மூத்த பத்திரிகையாளர்களான சித்தார்த் வரதராஜன் மற்றும் கரண் தாப்பர் ஆகியோருக்கு அனுப்பிய சம்மனில் குற்றங்கள் குறித்த விவரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை என்றும், எஃப்.ஐ.ஆரின் நகல் இணைக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த விவகாரத்திற்கு பத்திரிகை அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “மூத்த பத்திரிகையாளர்கள் சித்தார்த் வரதராஜன் மற்றும் கரண் தாப்பர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பிய அசாம் காவல்துறையின் நடவடிக்கையை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். சில நாட்களுக்கு முன்பு தொடர்புடைய ஒரு விஷயத்தில் உச்ச நீதிமன்றம் பாதுகாப்பு வழங்கிய போதிலும், சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
எஃப்.ஐ.ஆரின் நகல் மற்றும் வழக்கின் விவரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை, கைது அச்சுறுத்தல் மட்டுமே உள்ளது. ரத்து செய்யப்பட்ட தேசத்துரோகச் சட்டத்திற்கு மாற்றாக, சுயாதீன பத்திரிகையை நசுக்க பிஎன்எஸ் (BNS)இன் பிரிவு 152 தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. கேள்விகள் கேட்பது தேசத்துரோகமாகக் கருதப்பட்டால் ஜனநாயகம் நிலைத்திருக்க முடியாது” எனப் பதிவிட்டுள்ளார். அசாம் மாநிலத்தில் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.