கவிஞர் ஜீவபாரதி எழுதியுள்ள “காலம்தோறும் கம்யூனிஸ்டுகள்” என்ற நூல் வெளியீட்டு விழா நேற்று (28.7.2025) சென்னை காமராசர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் வாழ்த்துச் செய்தியை, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வாசித்தார். அதில், “இடதுசாரி இயக்கங்கள் மீதும், தலைவர்கள் மீதும் நான் கொண்டிருக்கும் பேரன்பும், பெரும் பாசமும் நாடறிந்த ஒன்று. பல விழாக்களில் முதுபெரும் தோழர் மணலி கந்தசாமியின் கருத்துகளை மேற்கோள் காட்டி நான் பேசுவதை நீங்கள் அறிவீர்கள். பொதுவுடைமைத் தத்துவத்தை உலகுக்குத் தந்த மாமேதை கார்ல் மார்க்ஸ் அவர்களின் சிலை சென்னையில் நிறுவப்படும் என்று அறிவித்து அதற்கான பணிகள் நடைபெற்று
வருகின்றன.
சமத்துவம், சமதர்மத்தின் கம்பீர அடையாளமாக கார்ல் மார்க்ஸின் சிலை சென்னையில் நிமிர்ந்து நிற்க வேண்டும் என்ற எனது ஆவலின் வெளிப்பாடே அது. அதுமட்டுமின்றி, திராவிட மாடல் அரசு ஏழை, எளிய மக்களின் நலன்களுக்காகப் புதிய புதிய திட்டங்களை நாள்தோறும் செயல்படுத்தி வருவதையும் கண்கூடாகப் பார்த்து வருகிறீர்கள். விடியல் பயணம் திட்டம். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடங்கி, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம் உள்பட சமூகத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சியை உறுதி செய்திடும் வகையில், ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற பொதுவுடைமைக் கருத்தியலை நடைமுறை வாழ்வியலாக மாற்றுவதற்கான அத்தனை முயற்சிகளையும் திராவிட மாடல் அரசு எடுத்து வருகிறது என்பதில் எனக்கு பெருமிதம் உண்டு.
இந்தியச் சமூக அமைப்பைப் பொறுத்தவரை அதிகார விடுதலை மட்டும் போதாது. வர்க்க விடுதலையும், சமூக விடுதலையும் இணைந்ததாக இருந்தால்தான் அது முழுமையானதாக இருக்கும் என்ற அன்றைய பொதுவுடைமைத் தலைவர்களின் கருத்தும், சமூகநீதி இயக்கமாக வழிவந்த திராவிட இயக்க முன்னோடிகளின் சிந்தனையும் எத்தனை தீர்க்கமானது என்பதை இன்றுவரை அனுபவரீதியாக உணர்ந்து வருகிறோம். அதனால்தான், பொதுவுடைமை இயக்கமும்: திராவிட இயக்கமும் இந்த இருபெரும் விடுதலைக்காக இரட்டைக் குழல் துப்பாக்கிளாக இன்றுவரை இயங்கி வருவதையும் நாம் அறிவோம்” எனத் தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சியில் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா, தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், கவிப்பேரரசு வைரமுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் எனப் பலரும் கலந்துகொண்டனர்.