நடைமுறைச் சிக்கல்களைத் தேர்தல் ஆணையம் கணக்கில்கொள்ளுமா? என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியா கூட்டணியினர் எழுப்பிய கேள்விகளுக்கு விடையளிப்பதற்குப் பதிலாக, கூடுதலான கேள்விகளை எழுப்பியிருக்கிறது தலைமைத் தேர்தல் ஆணையரது ஊடகச் சந்திப்பு. பின்வரும் கேள்விகள் எழுகின்றன: 1.வீடுதோறும் கணக்கெடுப்பு நடத்தியும், எப்படி இத்தனை தகுதியான வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்?. 2.புதிய வாக்காளர்களின் பதிவு வழக்கத்திற்கு மாறாகக் குறைவாக உள்ளது. இந்த இளம் வாக்காளர்கள் கணக்கெடுக்கப்பட்டனரா?. 

Advertisment

தகுதிக்குரிய நாளில் 18 வயது நிறைவுற்ற எத்தனை இளம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர் என்பதைச் சொல்லும் தரவுகள் ஏதேனும் இருக்கிறதா?. 3. வாக்காளர் பதிவு விதிகள் (Registration of Electors Rules), 1960இன்கீழ் கொடுக்கப்பட்டுள்ள விசாரணை மற்றும் இரண்டு முறையீடு  நடைமுறைக்கான காலவரையறை, எதிர்வரும் பீகார் மாநிலத் தேர்தலில் பெருமளவிலான வாக்காளர்களை விலக்கும் வாய்ப்புள்ளது. இவ்விவகாரத்தைத் தேர்தல் ஆணையம் எவ்வாறு தீர்க்கப் போகிறது?. 4.பிற மாநிலங்களில் சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR) மேற்கொள்ளப்படும்போது, இந்த நடைமுறைச் சிக்கல்களைத் தேர்தல் ஆணையம் கணக்கில்கொள்ளுமா?.

5.01/05/2025 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, மறைந்த வாக்காளர்களின் பெயரை நீக்குமாறு 17/07/2025 அன்று தேர்தல் ஆணையத்திடம் நாங்கள் முறையிட்டோம். இது எப்போது நிறைவேற்றப்படும்?. 6.வாக்காளரின் உரிமையை உறுதிப்படுத்தும் ஆவணமாக ஆதாரை ஏற்கத் தேர்தல் ஆணையத்தைத் தடுப்பது எது?. 7.“நியாயமான தேர்தல்கள்” என்பதே தேர்தல் ஆணையத்தின் இலக்காக இருக்குமானால், அது மேலும் வெளிப்படைத்தன்மையுடனும் - வாக்காளர்களுக்கு நெருக்கமாகவும் இருக்கலாமே?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.