தென்காசி மாவட்டம், கடையநல்லூர் வட்டம், இடைக்கால் கிராமம், திருமங்கலம் – கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். அதோடு நிதியுதவியையும் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தென்காசி மாவட்டம், கடையநல்லூர் வட்டம், இடைக்கால் கிராமம், திருமங்கலம் கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று (24.11.2025) காலை சுமார் 11.00 மணியளவில் இரண்டு தனியார் பேருந்துகள் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதிக்கொண்டன. 

Advertisment

இந்த விபத்தில் பேருந்துகளில் பயணம் செய்த 5 பெண்கள் மற்றும் ஒரு ஆண் உட்பட 6 நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு கடும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். மேலும், இவ்விபத்தில் காயமடைந்து தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 56 நபர்களுக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தவிட்டுள்ளேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

Advertisment

அதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும், இலேசான காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தென்காசி கடையநல்லூரில் நேர்ந்த பேருந்து விபத்தில் ஆறு பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் வேதனைக்குள்ளாகியிருக்கிறேன்.

உடனடியாக, மாவட்டப் பொறுப்பு அமைச்சரான கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனைத் தொடர்புகொண்டு, சம்பவ இடத்திற்கு விரைந்து செல்ல அறிவுறுத்தியுள்ளேன். விபத்து நேர்ந்த இடத்திலிருந்து பேசிய மாவட்ட ஆட்சியரை, அரசு மருத்துவமனைக்குச் சென்று, பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய உயர்தர சிகிச்சையை உறுதிசெய்யுமாறு உத்தரவிட்டுள்ளேன். இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அவர்களது குடும்பத்தினர்க்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்துள்ளவர்கள் விரைந்து நலம்பெற அரசு துணை நிற்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment