கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், எல்லை கிராமத்தில் விஷப்பாம்பு கடித்து  இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.  அதோடு நிதியுதவியும் அறிவித்துள்ளார்.  

Advertisment

இது தொடர்பாக  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், எல்லை கிராமத்தைச் சேர்ந்த பெ. ஜெயராமன் என்பவரின் மகன் வினாயகமூர்த்தி (வயது 23). இவர் கடந்த 4ஆம் தேதி (04.10.2025) எல்லை கிராமத்தில் உள்ள அவரது வயலில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அவரை எதிர்பாராதவிதமாக விஷப்பாம்பு கடித்தது.  இதனால் உடனடியாக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்படி அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (09.10.2025) காலை சுமார் 06.00 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

Advertisment

இந்த துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன். மேலும், இச்சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அதோடு, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.