தமிழக சட்டப்பேரவையின் 4ஆம் நாள் கூட்ட நிகழ்வுகள் இன்று (17.10.2025) காலை தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஆணவப் படுகொலைகளைத் தடுக்கும் நோக்கில் உரியச் சட்டம் இயற்றத் தேவையான நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு எடுக்கும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டமன்றப் பேரவையில் தெரிவித்து உரையாற்றினார். அதில், “ஆணவப்படுகொலை நடைபெறும்போது அது தொடர்பான வழக்குகள் அனைத்திலும் கடுமையான பிரிவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இப்படுகொலைக்குச் சாதி மட்டுமே காரணமல்ல இன்னும் பல காரணங்களும் இருக்கின்றன. 

Advertisment

எதன் பொருட்டு நடந்தாலும் கொலை கொலைதான். அதற்கான தண்டனைகள் மிக மிகக் கடுமையாகத் தரப்பட்டு வருகின்றன. சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் உடனடியாக குண்டர் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். யாரும் எவரும் எதன் பொருட்டும் செய்த குற்றத்திலிருந்து தண்டனை இல்லாமல் தப்பிவிடக்கூடாது என்பதை காவல்துறைக்கு உத்தரவாகப் போட்டுள்ளோம். எனவே சட்டம் தன்னுடைய கடமையைச் செய்கிறது. அதே நேரத்தில் இக்கொடூரமான சிந்தனைக்கு எதிரான விழிப்புணர்வுப் பரப்புரையை சமூக சீர்திருத்த இயக்கங்கள் மட்டுமல்ல அரசியல் இயக்கங்களும் பொதுநல அமைப்புகளும் செய்ய வேண்டும் என்பதை என்னுடைய வேண்டுகோளாக வைக்க விரும்புகிறேன். 

Advertisment

நாகரிகச் சமுதாயத்தின் அடையாளம் என்பது பொருளாதார மேம்பாடு மட்டுமல்ல சமூக சிந்தனையின் மேம்பாடு என்பதை உணர்த்துவதாக இப்பரப்புரைகள் இருக்க வேண்டும். சமுதாயத்தில் சாதி வேற்றுமைக்கு எதிராக ஆதிக்க மனப்பான்மைக்கு எதிராக அனைவரும் பேச வேண்டும். மனிதர்களுக்குள் ஏற்ற தாழ்வுகள் ஏதுமில்லை அனைவரும் சமம். பாலின சமத்துவமும் வளர்ச்சி பெற்ற சமுதாயத்திற்கு ஒரு அடையாளம் என்றார் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் . அனைத்து விதமான ஆதிக்க மனப்பான்மைக்கும் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். ஆதிக்க எதிர்ப்பும் சமத்துவ சிந்தனையும் கொண்ட சுயமரியாதையையும் அன்பும் சூழ்ந்த மானுடத்தை உருவாக்குவதற்கான பரப்புரையை ஒரு இயக்கமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டியது நம் அனைவரின் கடமை. 

சீர்திருத்தப் பரப்புரையும் குற்றத்திற்கான தண்டனையும் வாழும் கேடயமாக முன்னெடுக்கப்பட வேண்டும். இது குறித்து தேவையான பரிந்துரைகள் அளிப்பதற்காக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கே.என். பாஷா தலைமையில் சட்ட வல்லுநர்கள் முற்போக்கு சிந்தனையாளர்கள் மானுடவியல் அறிஞர்களைக் கொண்ட ஒரு ஆணையம் அமைக்கப்படும் என்பதை என்னுடைய முக்கியமான அறிவிப்பாக இம்மாமன்றத்தில் அறிவிக்கிறேன். இந்த ஆணையம் அரசியல் இயக்கங்கள் சட்ட வல்லுநர்கள் சமூக செயல்பாட்டாளர்கள் பாதிக்கப்பட்ட மக்கள் என அனைத்து தரப்பினர் கருத்துக்களையும் பெற்று இப்பொருள் குறித்து உரியப் பரிந்துரைகளை வழங்கும். அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு ஆணவப் படுகொலைகளைத் தடுக்கும் நோக்கில் உரிய அட்டமியற்ற தேவையான நடவடிக்கை எடுக்கும் என்று உறுதி அளிக்கிறேன்” எனப் பேசினார்.

Advertisment