பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 118வது பிறந்த நாள் விழா மற்றும் 63வது குருபூஜை, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் இன்று (30.10.2025) நடைபெற்று வருகிறது. இதனையொட்டி மதுரை மாவட்டம் கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து அவரது சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த உருப்படத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செய்தார். 

Advertisment

இதனையடுத்து அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோரும்  முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினர். அதன் பின்னர் முதல்வர் மு.க. ஸ்டாலின், மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மாமன்னர் மருது சகோதரர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வின்போது,  ஐ. பெரியசாமி, மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், பெரியகருப்பன், ராஜகண்ணப்பன், டி.ஆர்.பி. ராஜா மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் எனப் பலரும் உடனிருந்தனர்.

Advertisment

அதன் பின்னர் முதல்வர் மு.க. ஸ்டாலின் சாலை மார்க்கமாக பசும்பொன் புறப்பட்டுச் சென்று பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவில் பங்கேற்றார். அப்போது முதல்வருடன் அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் எனப் பலரும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். இதனையடுத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “முத்துராமலிங்க தேவர் பெயரில் ரூ.3 கோடி செலவில் திருமண மண்டபம் அமைக்கப்படும்” என்ற முக்கிய அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டார். முன்னதாக பசும்பொன் தேவர் நினைவாக திமுக ஆட்சியில் செய்த நலத்திட்டங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் பட்டியலிட்டு பேசியது குறிப்பிடத்தக்கது. 

மேலும் இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அடக்குமுறைச் சட்டங்களின் ஆதிக்கத்தில் இருந்து நம் மக்களை மீட்டு, நேதாஜி அவர்களின் நம்பிக்கைக்குரியவராக நாட்டு விடுதலைக்குப் போராடிய தீரர் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் ஜெயந்தியில் அவரது திருவுருவச் சிலைக்கும், பசும்பொன் நினைவிடத்திலும் எனது மரியாதையைச் செலுத்தினேன். மேலும் மதுரை தெப்பகுளத்தில் மானம் காத்த மருதிருவர் திருவுருவச் சிலைக்கும் மலர் மாலை அணிவித்து வணங்கினேன். பசும்பொன்னில் மாபெரும் திருமண மண்டபம் கட்டப்படும் என்ற புதிய அறிவிப்பை வெளியிட்ட மனநிறைவுடன் சென்னைக்குத் திரும்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். இதே போன்று குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதா கிருஷ்ணன்,அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தி வருகின்றனர். 

Advertisment