சென்னை, நுங்கம்பாக்கத்தில் குட் ஷெப்பேர்டு பள்ளியின் நூற்றாண்டு நிறைவு விழா இன்று (22.08.2025) நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு நூற்றாண்டு (100 Years of Shepherding) சிறப்பு மலரினை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், “இன்றைக்கு அறிவியல் எவ்வளவோ வளர்ந்துவிட்டது. உங்களுக்குத் தேவையான அறிவை பெற, நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. அதிலும் இப்போது செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி புது புரட்சியையே உண்டாக்கிக் கொண்டிருக்கிறது. அதற்காக, ‘எல்லாவற்றுக்கும் செயற்கை நுண்ணறி இருக்கிறது. நாம் எதற்கு படிக்கவேண்டும்’ என்று நினைத்துவிடாதீர்கள். எந்த கண்டுபிடிப்பையும் நீங்கள் உங்கள் வளர்ச்சிக்காகதான் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர, அது உங்களுடைய சிந்தனையை சிதைக்க அனுமதிக்க கூடாது. 

Advertisment

அதேபோல, உங்கள் ரோல் மாட்லை இன்ஸ்டாகிராமில் தேடாதீர்கள். பொழுதுபோக்கு வாழ்க்கையின் ஒரு அங்கம்தான். அதுவே வாழ்க்கை இல்லை. சுருக்கமாகச் சொல்லவேண்டும் என்றால், நீங்கள் ரீல்ஸ் பார்ப்பதெல்லாம் ரியாலிட்டி என்று நம்பிவிடாதீர்கள். லைக்ஸ், வீவ்ஸில் கெத்து இல்லை. மதிப்பெண், டிகிரில் தான் உண்மையான கெத்து இருக்கிறது. படிப்பதுடன் நன்றாக விளையாடுங்கள். உடல்நலனையும் பார்த்துக்கொள்ளுங்கள். ஆசிரியர்களும் இன்றைக்கு இருக்கின்ற பிள்ளைகளுக்கு ஏற்றது போல அப்கிரேடு ஆகவேண்டும். 

பெற்றோர்களும், ‘நம்முடைய பிள்ளைகள் என்ன நினைக்கிறார்கள்?’ என்று காது கொடுத்து கேளுங்கள். மனதுவிட்டு பேசுங்கள். அவர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் பயப்படாமல், நம்மிடம் தைரியமாக சேர் (share) செய்யவேண்டும். அந்த நம்பிக்கையை அவர்களுக்கு நீங்கள் கொடுக்கவேண்டும். பிள்ளைகளிடம், உன் பெஸ்ட் ஃபிரண்ட் யாரு என்று கேட்டால், ‘எங்க அப்பா அம்மா’ என்று சொல்லவேண்டும். அப்படி பழகுங்கள். கல்வி நண்பர்கள் சூழல் - இதுதான் பிள்ளைகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். எனவே, நல்ல ஆயராக இருந்து, பிள்ளைகளை முன்னேற்ற வேண்டும்” எனப் பேசினார். 

இவ்விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர்கள் நா. எழிலன், இனிகோ இருதயராஜ், பெருநகர சென்னை மாநகராட்சி நிலைக்குழு தலைவர் நே. சிற்றரசு, தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர் ஜோ அருண், கோவா தலைமை ஆயர் கார்டினல் பிலிப்பி, ரோம் நாட்டைச் சேர்ந்த அருட்சகோதரி ஜோசிடா, மத்திய கிழக்கு இந்திய குட் ஷெப்பேர்டு குழும தலைமை அருட்சகோதரி புஷ்பா லூயிஸ், பள்ளி தாளாளர் அருட்சகோதரி அருணா ஜார்ஜ், பள்ளி முதல்வர் அருட்சகோதரி ஆனி தாமஸ் மற்றும் குட் ஷெப்பேர்டு பள்ளி குழுமத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்