இமாசல பிரதேசம், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நேற்று (13.08.2025) இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இத்தகைய சூழலில் தான் ஜம்மு காஷ்மீரில் உள்ள ஜோசிதி கிஷ்த்வார் பகுதியில் இன்று (14.08.2025) மதியம் திடீரென மேக வெடிப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு திடீர் வெள்ளம் மற்றும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. இங்குள்ள கட்டிடங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. எனவே இடிபாடுகளில் பலர் சிக்கி இருக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. 

Advertisment

இதனையடுத்து இடிபாடுகளில் சிக்கியுள்ள மக்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கான நடவடிகையில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர், ராணுவ வீரர்கள், காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். ஜோசிதி கிஷ்த்வார் பகுதி ராணுவ முகாம்கள் உள்ள பகுதி என்பதால் ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் விரைவாகச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த மேக வெடிப்பில் சிக்கி 10 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரமாக 10 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

அதே சமயம் இமாசல பிரதேசத்தின் தலைநகரான சிம்லாவில் பெய்த கனமழை காரணமாக நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ள. இதனால் அங்குள்ள வாகனங்கள் இடிபாடுகளுக்குள் புதைந்தன. எனவே பல் மருத்துவக் கல்லூரி சாலை மூடப்பட்டது. மேலும் இந்த சாலையைச் சுத்தம் (மீட்புப் பணி) செய்யும் முயற்சிகளும் நடந்து வருகின்றன.