Cloudburst in Chennai - Pradeep John's update Photograph: (weather)
நேற்று இரவு சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பல்வேறு இடங்களில் நீர் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
சென்னையில் ஒரு பல இடங்களில் நேற்று இரவு 10 மணி முதல் 11 மணி வரை பல இடங்களில் கனமழை கொட்டி தீர்த்ததில் பல இடங்களில் அதிக அளவு மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. குறிப்பாக அதிகபட்சமாக மணலியில் 26 சென்டிமீட்டர் மழையும், கொரட்டூரில் 18 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல் அம்பத்தூர், நெற்குன்றம், பாரிமுனை, கொளத்தூர், காசிமேடு, வளசரவாக்கம், தண்டையார்பேட்டை, அமைந்தகரை, புழல், துறைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பதிவாகியுள்ளது. சென்னையில் நள்ளிரவு பெய்த இந்த கனமழை காரணமாக விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் நான்கு விமானங்கள் பெங்களூர் திரும்பியது.
இந்நிலையில் சென்னையில் பல இடங்களில் ஒரு மணி நேரத்திற்குள் 10 சென்டிமீட்டர் அதிக கன மழை பதிவாகியுள்ளது. சென்னையில் முதல் முறையாக மேக வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அதேபோல் கோவை, திண்டுக்கல், மதுரை, தென்காசி, தேனி, திருப்பூர், விருதுநகர், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், நீலகிரி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட 17 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.