சிவகாசியில் தன் வீட்டின் முன்பாக வாசலில் தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்த 70 வயது மூதாட்டி மகேஸ்வரியின் கண்களைப் பொத்தி தங்கச் செயின் மற்றும் கம்மலைப் பறிக்க முயன்ற முகமூடி கொள்ளையனிடமிருந்து தப்பிக்க, அவன் முகத்தில் தண்ணீரை அவர் வேகமாக ஊற்ற, திராவகமாக இருக்குமோ என்று கொள்ளையன் பயந்து ஓடிய காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகி வைரலானது.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த சிவகாசி கிழக்கு காவல்நிலையம், சாலைகளில் பொருத்தப்பட்டிருந்த 20க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து முகமூடி கொள்ளையனைத் தேடிய நிலையில், சிவகாசியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் பிடிபட்டார். விசாரணையில் மாரிமுத்து இதற்கு முன்பாக வீடு வீடாகச் சென்று பால் வியாபாரம் செய்து வந்ததும், மூதாட்டி மகேஸ்வரியின் வீட்டுக்குப் பால் ஊற்றி வந்ததும் தெரியவந்துள்ளது. பெண்களுடனான சகவாசத்தால் மாரிமுத்து பால் வியாபாரத்தில் நஷ்டமடைந்து, ரூ.16 லட்சம் வரை வாங்கியிருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து, இட்லி, தோசை மாவு விற்றுப் பிழைத்தபோது, கடன் கொடுத்தவர்கள் திருப்பிக் கேட்க, நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறார். கடனிலிருந்து மீள்வதற்காகக் கொள்ளையடிக்க முடிவு செய்த மாரிமுத்து, முகமூடி கொள்ளையனாக மாறி, தான் ஏற்கனவே பால் ஊற்றி வந்த மகேஸ்வரியின் வீட்டை நோட்டமிட்டு, செயின் பறிப்பில் ஈடுபட்டு, சிசிடிவி பதிவில் சிக்கி, தற்போது காவல்துறையிடம் மாட்டிக்கொண்டார். கைதான மாரிமுத்தைச் சிவகாசி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, விருதுநகர் மாவட்ட சிறைச்சாலையில் அடைத்துள்ளனர்.
Follow Us