Clerk arrested for accepting bribe to purchase paddy from farmer
விருதாச்சலம் அருகே கருவேப்பிலம் குறிச்சி அடுத்துள்ள மேலப்பாளையூரில், அரசு நேரடி கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. இதில் நெய்வேலியை சேர்ந்த ராஜாராம் ( 41 ) பட்டியல் எழுத்தராக பணிபுரிந்து வந்துள்ளார். மேலும் அங்கு அதே பகுதியைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் லோடுமேனாக பணிபுரிந்து வருகின்றனர்.
இங்கு சி .கீரனூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வக்குமார் ( 55 ) நேற்று முன்தினம் 41 கிலோ எடையுள்ள 332 மூட்டைகளை கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்துள்ளார். கொள்முதல் செய்யப்பட்ட மூட்டைக்கு ரூ 55 வீதம் ரூ 18, 260 பட்டியல் எழுத்தர் ராஜாராம் மற்றும் லோடு மேன்கள் லஞ்சமாக கேட்டுள்ளனர். இந்த நிலையில் செல்வகுமார் இது குறித்து கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார்.
லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரிடம் ரசாயன தடவிய ரூபாய் நோட்டுகளை தந்து பட்டியல் எழுத்தரிடம் தருமாறு கூறிய அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து நேற்று மாலை செல்வகுமார் ரூ 18,260 ஐ லோடுமேன் வீரபாண்டியன் மற்றும் பட்டியல் எழுத்தர் ராஜாராமன் ஆகியவரிடம் தந்துள்ளார். அப்போது மறைந்திருந்த கடலூர் மாவட்ட பொறுப்பு கள்ளக்குறிச்சி மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி சத்யராஜ் தலைமையிலான போலீசார் அவர்களை கைது செய்தனர்.
Follow Us