அண்ணாமலைப் பல்கலைக்கழகம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்துடன் (என்எல்சி) இணைந்து, பல்கலைக்கழகப் பொறியியல் புல வளாகத்தில் 2016 ஆம் ஆண்டு முதல் சுரங்கவியல் பட்டயப் படிப்பை வழங்கி வருகிறது. இதில் மொத்தம் 60 இடங்களில், 30 இடங்கள் என்எல்சி ஊழியர்கள் மற்றும் நிறுவனத்திற்கு இடம் அளித்தவர்களின் வாரிசுகளுக்கும், மீதமுள்ள 30 இடங்கள் பொதுமக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த மூன்றாண்டு படிப்புக் காலம் முடிந்து, என்எல்சி நிறுவனத்தில் தொழில் பழகுநர் பயிற்சி முடித்தவுடன், முதல் வகுப்பில் தேர்ச்சி பெறும் மாணவர்களை என்எல்சி நிறுவனம் பணியில் சேர்த்துக்கொள்கிறது. இதனால், இந்த சுரங்கவியல் பட்டயப் படிப்பு மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்நிலையில், இந்தக் கல்வியாண்டிற்கான (2025-26) மாணவர் சேர்க்கை முடிவடைந்த நிலையில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கும் நிகழ்ச்சி பல்கலைக்கழக சுரங்கவியல் பட்டயப் பயிற்சித் துறையில் நடைபெற்றது. பட்டயப் படிப்புத் துறையின் இயக்குநர் சரவணன் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினராக, என்எல்சி நிறுவனத்தின் சுரங்கங்கள் மற்றும் நிலங்களுக்கான செயல் இயக்குநர் ஜாஸ்பர் ரோஸ் கலந்துகொண்டு, முதலாம் ஆண்டு சுரங்கவியல் பட்டயப் படிப்பிற்கு வகுப்பு செல்லும் மாணவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்து பேசினார். இந்தியாவின் கனிம வளங்கள், தாதுக்களின் தவிர்க்க முடியாத எதிர்காலத் தேவை, மாற்று ஆற்றல் மூலங்களின் முக்கியத்துவம் மற்றும் சுரங்கவியல் பட்டயப் படிப்பு பயின்றவர்களுக்கு நெய்வேலி பழுப்பு நிலக்கரி மற்றும் இதர சுரங்க நிறுவனங்களில் உள்ள வேலை வாய்ப்புகள் பற்றி அவர் பேசினார். மேலும், மாணவர்கள் ஒழுக்கம்மிக்க சுரங்கவியல் பொறியாளர்களாக உருவாக வேண்டும் என வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, கடலூர் அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் திருப்பதி, சுரங்கப் பணி மற்றும் மாணவர்களின் உடல் நலன் குறித்து பேசி வாழ்த்துரை வழங்கினார். இணைப் பேராசிரியர் சிவராஜ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
பேராசிரியர் பழனிவேல் ராஜா அனைவருக்கும் நன்றி கூறினார்.இதில் இணைப் பேராசிரியர்கள் வினோத்குமார், பாலமுருகன், பிரேம்குமார், உதவிப் பேராசிரியர் ராஜசோமசேகர், மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.