திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் கஞ்சா விற்பனை தொடர்பாக பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் இளைஞர் ஒருவர் நண்பர்களாலேயே கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்த அப்சல் என்பவர் பல ஆண்டுகளாகவே நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு கஞ்சா புகைப்பது மற்றும் போதை மாத்திரைகள், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி அன்று கஞ்சா விற்பனை பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக நண்பர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அதில் கஞ்சா போதையில் இருந்த 16 பேர் கொண்ட நண்பர்களே அப்சலை தாக்கி மயக்கம் அடையச் செய்து அங்கிருந்து குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று ஏரியில் வைத்து  கை, கால்களை உடைத்து கத்தியால் உடல் முழுவதும் காயங்களை ஏற்படுத்தி கொலை செய்து அதே பகுதியில் மேலோட்டமாக 3 அடி ஆழத்தில் குழியைத் தோண்டி புதைத்தது தெரியவந்தது.

குறைந்த ஆழத்திலேயே உடல் புதைக்கப்பட்டதால் துர்நாற்றம் வீசியது. அதேநேரம் அப்சலை காணவில்லை என அவர்களுடைய பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தனர். இதன் அடிப்படையில் அப்சலுடைய நண்பர்கள் ஹரிஷ் மற்றும் சிறுவன் உட்பட இரண்டு பேரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு காரணமாக அப்சலை கஞ்சா போதையில் கொலை செய்து ஏரி பகுதியில் புதைத்தது தெரிய வந்தது.

இந்நிலையில் இன்று திருவண்ணாமலை மாவட்ட எஸ்பி சுதாகரன் தலைமையிலான 50க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்புடன் ஏரி பகுதியில் சிறிய அளவிலான சாமினா பந்தல் அமைத்து கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட அப்சலின் உடலைத் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை மேற்கொண்டனர். இந்த சம்பவத்தில் 16 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணையானது நடைபெற்று வருகிறது. கஞ்சா விற்பனை தொடர்பாக ஏற்பட்ட மோதலில் ஒருவர் நண்பர்களாலேயே அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை  ஏற்படுத்தி இருக்கிறது.