தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த 27ஆம் தேதி அன்று கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதற்காக அதிகமான மக்கள் அங்குக் கூடியதால் கடும் நெரிசல் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பலர் மயக்கமடைந்த நிலையில் 40 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தேசிய அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. கூட்ட நெரிசலில் காயமடைந்து வேலுச்சாமிபுரத்தைச் சேர்ந்த சுகுணா என்பவர் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், அவர் உயிரிழந்ததால் கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தின் பல பகுதிகளில் விஜய் தொடர்பாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அந்த போஸ்டரில், "தமிழக அரசே, 39 அப்பாவி உயிர்களைப் பலி வாங்கிய தப்பி ஓடிய விஜய் என்ற அரசியல் தற்குறியை குற்றவாளியாகக் கைது செய்" என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இந்த வகையில், வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகள் மற்றும் சுவர்களில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இது திமுக சார்பில் ஒட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தப் போஸ்டர் தொடர்பாக தவெகவினருக்கும், திமுகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியுள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பேரணாம்பட்டு காவல்துறையினர், இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, காவல்துறையினரின் கண் முன்னே திமுகவினர் தவெகவினரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவர்களைக் கைது செய்யக் கோரி, குடியாத்தம்-ஆம்பூர் சாலையில் உள்ள பேரணாம்பட்டு பங்களா மேடு பேருந்து நிலையத்தில் தவெகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று உறுதியளித்ததன் பேரில், அனைவரும் கலைந்து சென்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.