திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகிலுள்ள பெருமாள்பேட்டை பகுதியில் உள்ள பொன்னியம்மன் கோவில் திருவிழா ஆகஸ்ட் 19 மற்றும் 20 ஆகிய இரு தினங்கள் நடைபெற்றது. திருவிழா முடிந்த பின்னர், வரவு-செலவு கணக்குகளை ஆய்வு செய்யும்போது, அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார், மேளதாளம் வாசித்தவர்களுக்கு பணம் வழங்கப்படவில்லையா? என்று விழா குழுவினரிடம் கேள்வி எழுப்பினார்.

Advertisment

இதனால், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அது மோதலாக மாறியது. சுரேஷ்குமாருக்கு ஆதரவாக அவரது மனைவி வான்மதி வந்து கேள்வி கேட்டபோது, திருவிழா குழுவைச் சேர்ந்த கோபி, கிருஷ்ணன் உள்ளிட்ட ஒன்பது பேர் வான்மதியைத் தாக்கியுள்ளனர். இதனால் மோதல் தீவிரமடைந்து, இரு தரப்பினரும் மோதிக்கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்த ஊர் தலைவர்கள் இரு தரப்பையும் சமாதானப்படுத்தி அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

ஆனால், மறுநாள், கோபி தரப்பைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்டோர் சுரேஷ்குமாரின் வீட்டிற்குள் நுழைந்து, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சுரேஷ்குமார், வான்மதி, கிருஷ்ணமூர்த்தி மற்றும் சாந்தி ஆகியோரைத் தாக்கினர். மேலும், பெண்கள் அணிந்திருந்த தங்கச் சங்கிலிகளைப் பறித்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் காயமடைந்தவர்கள் வாணியம்பாடி மற்றும் வேலூர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

2

Advertisment

இச்சம்பவம் குறித்து வாணியம்பாடி நகர காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, இரு தரப்பைச் சேர்ந்த 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால், பாதிக்கப்பட்ட சுரேஷ்குமார், அவரது மனைவி வான்மதி மற்றும் தாயார் வாணியம்பாடி அரசு மருத்துவமனையிலும், அவரது தந்தை வேலூர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வரும் நிலையில், காவல்துறையினர் தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் காலதாமதம் செய்வதாகப் புகார் எழுந்துள்ளது. மேலும், கோபி தரப்பினர் பாஜகவில் இருப்பதாகவும், அவர்கள் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுப்பதாகவும், இதனால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும் கூறி, பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனையில் தங்கியிருப்பதாக வேதனை தெரிவித்துள்ளனர். அவர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாணியம்பாடி பொன்னியம்மன் கோவில் திருவிழாவின் வரவு-செலவு கணக்கு தொடர்பாக மேளதாளம் வாசித்தவர்களுக்கு பணம் வழங்கப்படவில்லை எனக் கேள்வி எழுப்பிய குடும்பத்தினரை 15-க்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல் வீடு புகுந்து தாக்கிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.