கோவை ரத்தினபுரி செக்கான் தோட்டம் பகுதியில் வட மாநில இளைஞர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதுடன், ஒரு வட மாநில பெண்ணையும் தாக்கிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Advertisment

தொழில் நகரமான கோவையில் பல்வேறு வெளி மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலை நிமித்தமாக வந்து தங்கியுள்ளனர். பிகார், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், சண்டிகர் உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் குழுவாக வந்து தங்கி, வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், ரத்தினபுரி செக்கான் தோட்டம் பகுதியில் தங்கியிருக்கும் வட மாநில இளைஞர்களிடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வருவதாகத் கூறப்படுகிறது.

இந்தச் சூழலில், வட மாநில இளைஞர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்வதுடன், ஒரு வட மாநில பெண்ணையும் தாக்குவதைக் காட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த மோதல் குறித்து பொதுமக்கள் கோவை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தபோதிலும், மொழிப் பிரச்சினை காரணமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பெரிய அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன்பாக இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க காவல் துறை உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ரத்தினபுரி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.