சிதம்பரம் நகர்மன்ற கூட்டத்தில் பத்திரிக்கை துறையினரை ஒருமையில் பேசிய திமுக நகர்மன்ற தலைவரை கண்டித்து பத்திரிகையாளர்கள் வெளிநடப்பு செய்தனர். சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் கே.ஆர்.செந்தில்குமார் தலைமை தாங்கினார். இதில் நகர்மன்றத் துணைத் தலைவர் முத்துக்குமரன் நகராட்சி ஆணையர் மல்லிகா, பொறியாளர் உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட நகர்மன்ற உறுப்பினர்கள். நகராட்சி அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
மன்ற கூட்டம் தொடங்கிய போது நகர மன்ற துணைத் தலைவர் முத்துக்குமரன் சிதம்பரம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் கலந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக ஆட்சிக் காலத்திலும் அதனைத் தொடர்ந்து திமுக ஆட்சிக் காலத்தில் 1000-க்கும் மேற்பட்ட வீடுகள் ஆக்கிரமிப்பு என அகற்றப்பட்டுள்ளது. அதில் அகற்றப்பட்ட பொதுமக்களுக்கு வீட்டுமனை பட்டா இல்லாதவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என இந்த நகர் மன்றம் பொறுப்பேற்ற 4 ஆண்டுக்கு முன் நடைபெற்ற முதற்கூட்டத்திலேயே பேசியதாகவும், அதற்கு நகர்மன்ற தலைவர் ஒரு வருட காலத்திற்குள் வீட்டுமனை பட்டா கிடைக்க ஏற்பாடு செய்வதாகவும் உறுதி அளித்துள்ளீர்கள். ஏழைமக்களுக்கு வீட்டு மனைபட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசினார்.
இதற்கு நகர் மன்ற தலைவர் பதிலளித்து பேசுகையில் வீட்டுமனை எங்கே உள்ளது என காட்டுங்கள். நாங்களே வீடுகட்டி கொடுக்கிறோம். அப்படி இல்லையென்றால் எந்தெந்த கவுன்சிலர்களிடம் எவ்வளவு பணம் உள்ளது என்று தெரியும். அவர்கள் ஒன்று சேர்ந்து வீடு இழந்தவர்களுக்கு மனை வாங்கிக் கொடுத்தால் வீடு கட்டி கொடுப்பது என்னுடைய பொறுப்பு என்றும். மேலும் நான் அந்த வீடுகளை கடப்பாரை வைத்து இடித்தேனா? அல்லது வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பொக்களின் இயந்திரத்தைக் கொண்டு இடித்தாரா? உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என் நேரு அதனை மண்வெட்டியால் வாரி போட்டாரா? எனப்பேசிவிட்டு உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அது இடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஏன் நீர் வழி ஆக்கிரமிப்பில் வீடு கட்டினார்கள். தெரிந்தும் கட்டிவிட்டு ஏன் இப்படி மாற்று இடம் என இங்கே வந்து கூறுகிறீர்கள் என கோபமாக பேசினார்.
அப்போது மன்ற கூட்ட செய்தி சேகரித்த பத்திரிக்கையாளர்களிடம் எல்லாத்தையும் எடுக்கிறீர்கள் எதையுமே போட மாட்டீர்கள். அப்படியே போட்டாலும் ஆதார் கார்டு சைஸுக்கு தான் போடுகிறீர்கள். சிதம்பரம் நகரத்தில் ரூ 300 கோடிக்கு மேல் பணிகள் நடைபெறுகிறது. யார் செய்தி போட மறுக்கிறார்கள் ஆசிரியரா? சஃப எடிட்டரா? கூறுங்கள் அவங்களிடம் இங்குள்ள கவுன்சிலர்களை அழைத்து சென்று கேட்கிறோம் என ஒருமையில் பத்திரிகையாளர்களை பார்த்து பேசினார். இதைக் கேட்ட மன்றக் கூட்டத்தில் இருந்த அனைத்து பத்திரிகையாளர்களும் இவரது பேச்சைக் கண்டித்து வெளிநடப்பு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து மன்ற கூட்டத்தில் சில நகர்மன்ற உறுப்பினர்கள் மட்டுமே பேசிய நிலையில் கூட்டம் முடிவு பெற்றுள்ளது. செய்தியாளர்கள் புறக்கணித்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரல் ஆனதால். திமுகவின் ஐடி விங் உள்ளிட்ட திமுக முக்கிய தலைவர்கள் சிதம்பரம் பத்திரிகையாளர்களிடம் மன்ற கூட்டத்தில் நடந்த விவரத்தை கேட்டு விசாரித்துள்ளனர். அப்போது நகர்மன்ற கூட்டத்தில் பத்திரிக்கையாளர் பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன உள்ளது என்றும் பத்திரிகையாளர்களை தனியாக அழைத்து பேசியிருக்கலாம் கருத்து தெரிவித்துள்ளனர்.