கர்நாடக மாநிலம், தட்சிண கன்னட மாவட்டத்தில் அமைந்துள்ள கோயில் நகரமான தர்மஸ்தலாவில், 800 ஆண்டுகள் பழமையான புனிதத் தலமாக விளங்கும் பிரசித்தி பெற்ற மஞ்சுநாதர் கோயில் உள்ளது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பக்தர்கள் வரை நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் இக்கோயிலுக்கு வருகை தருகின்றனர். தலைமுறை தலைமுறையாக ஜெயின் ஹெக்டே குடும்பத்தினரால் இக்கோயில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது, மாநிலங்களவை உறுப்பினரான வீரேந்திர ஹெக்டே கோயிலின் நிர்வாகியாக உள்ளார்.
சிவபக்தர்களுக்கு அமைதியை அளிக்கும் தர்மஸ்தலாவில், 100க்கும் மேற்பட்ட சிறுமிகள், பள்ளி மாணவிகள், மற்றும் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டதாக, கோயிலில் பணியாற்றிய முன்னாள் துப்புரவு ஊழியர் ஒருவர் கடந்த ஜூலை மாதம் 4ஆம் தேதி தர்மஸ்தலா காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரைத் தொடர்ந்து ஜூலை 13 தேதி, புகாரளித்தவர் தனது அடையாளத்தை மறைத்து உடல் முழுவதும் கருப்பு துணியை அணிந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பெல்தங்கடி முதன்மை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.
இதைத் தொடர்ந்து, நீதிமன்றம் சம்பந்தப்பட்ட இடங்களில் ஆய்வு செய்ய உத்தரவிட்டது. அதன்படி, காவல்துறையினர் அடுத்தகட்ட நடவடிக்கையை எடுத்து வந்தனர். ஆனால், அந்த விசாரணையை எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால் இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழுவுக்கு (எஸ்.ஐ.டி) கர்நாடகா அரசு மாற்றி அமைத்தது. அதனைத் தொடர்ந்து சிறப்புப் புலனாய்வுக் குழு , புகாரளித்தவர் சுட்டிக் காட்டிய 13 இடங்களில் உடலைத் தோண்டி எடுக்கும் பணியை நடத்தி வந்தது. அந்த வகையில் அவர் 6ஆவதாக சுட்டிக்காட்டிய இடத்தில் ஏற்கனவே எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
அதனை தொடர்ந்து, கடந்த 4ஆம் தேதி 11ஆவதாக சுட்டிக்காட்டிய இடத்தில் சுமார் 100 எலும்புகள், ஒரு மண்டையோடு முதுகுத் தண்டு உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. அவை அனைத்தும் பரிசோதனைக்களுக்காக எடுத்துச் செல்லப்பட்டு இது ஒருவரின் எலும்புகளா? அல்லது பலரின் எலும்புகளா என்பது குறித்து ஆய்வு நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், தர்மஸ்தலாவில் கோயில் நிர்வாகத்தால் 100க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்ததாக, புகார் அளித்த நபரை சிறப்பு புலனாய்வுக் குழு இன்று (23-08-25) கைது செய்துள்ளது. தவறான தகவல் அளித்த புகாரின் பேரில், மங்களூருவில் நேற்று காலை 10 மணியில் இருந்து இன்று காலை 5 மணி வரை அவரிடம் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தியது. அதனை தொடர்ந்து, அவரை கைது செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.