Advertisment

பீகார் சஸ்பென்ஸுக்கு முற்றுப்புள்ளி;  நிதிஷ் குமாருக்கு ஆதரவளித்த கூட்டணித் தலைவர்!

nitich

Chirag paswan supports Nitish Kumar for NDA Cm Face in Bihar

பீகார் மாநிலத்தில், நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அம்மாநில சட்டசபையின் பதவிக்காலம் வரும் நவம்பர் 22 ஆம் தேதியுடன் நிறைவு பெறுவதையடுத்து, அம்மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று, நவம்பர் 14ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. 

Advertisment

மொத்தம் 243 தொகுதிகள் கொண்ட பீகாரில், ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் - பாஜக அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி, தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம்-காங்கிரஸ் அடங்கிய மகாகத்பந்தன் கூட்டணி தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. இது தவிர, அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லிமின் கட்சியின் தலைவரும் ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஓவைசி மற்றும் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜ் பிரதாப் ஆகியோர் தனித்து கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுகின்றனர். 

Advertisment

இதனால் பீகார் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கக்கூடிய நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதில், மகாகத்பந்தன் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டு காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணி தங்களது முதல்வர் வேட்பாளரை அறிவிக்கப்படாமலே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தது. மேலும், தேர்தல் வெற்றிக்குப் பிறகு முதல்வர் வேட்பாளர் குறித்து முடிவு செய்யப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருந்தார். 

கடந்த காலங்களில் மாறி மாறி கூட்டணி அமைத்தாலும் முதல்வர் என்ற பதவியை மட்டும் நிதிஷ் குமார் விட்டுக்கொடுக்கவில்லை. அப்படி இருக்கும் வேளையில், அடுத்த மாதம் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் வேட்பாளர் குறித்த அறிவிப்பு தேர்தலுக்குப் பின்னர் அறிவிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியிருந்தது நிதிஷ் குமாருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. இதனால், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சலசலப்பை உண்டாக்கியது. இந்த சூழ்நிலையில், பீகாரில் தனது பிரச்சாரத்தை தொடங்கிய பிரதமர் நரேந்திர மோடி, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக நிதிஷ் குமார் என அறிவித்தார். அதாவது அந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “இந்த முறை நிதிஷ் குமாரின் தலைமையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி கடந்த கால வெற்றி சாதனைகளை முறியடிக்கும்” என்று கூறினார். இதன் மூலம், நிதிஷ் குமாரை முதல்வர் வேட்பாளராக பிரதமர் மோடி அறிவித்துள்ளார் என்று கூறப்பட்டது.

நிதிஷ் குமாரை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக பிரதமர் மோடி அறிவித்த நிலையில், லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) தலைவரும், மத்திய அமைச்சருமான சிராக் பாஸ்வான் அந்த முடிவை பகிரங்கமாக ஆதரித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “எனது எம்.எல்.ஏக்கள் நிதிஷ் குமாரை முதலமைச்சராக்குவதற்கு வாக்களிப்பார்கள். தேசிய ஜனநாயகக் கூட்டணி இந்த முறை மிகவும் வலுவாகவும் ஒற்றுமையாகவும் உள்ளது. 2020 ஆம் ஆண்டில், தனித்தனியாக போட்டியிட்ட போதிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒரு அரசாங்கத்தை அமைக்க முடிந்தது. அப்போது, ​​உபேந்திர குஷ்வாஹா எங்களுடன் இல்லாததால் நாங்கள் மிகவும் பலவீனமான கட்டத்தில் இருந்தோம்.  இந்த முறை, நாங்கள் ஒன்றுபட்டுள்ளோம், அதே நேரத்தில் மகாகத்பந்தன் கூட்டணி பிளவுபட்டுள்ளது போல் தெரிகிறது. எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தலைவரைத் தேர்ந்தெடுப்பார்கள். எங்கள் எம்.எல்.ஏ.க்கள் நிதிஷ் குமாரை முதலமைச்சராக ஆதரிப்பார்கள்” என்று கூறினார். 

Nitish kumar bihar assembly election Bihar Chirag Paswan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe