பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் உள்ள பீகார் ராணுவ காவல் மைதானத்தில் ஜூலை 24 அன்று ஊர்க்காவல் படையினருக்கான ஆட்சேர்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பங்கேற்பதற்காக ஏராளமான இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் வந்திருந்தனர். அதில் 26 வயது இளம்பெண் ஒருவரும் பங்கேற்றிருந்தார். அப்போது அவருக்கு ஊர்க்காவல் படையினருக்கான பயிற்சியின் ஒரு பகுதியாக, உடல் சகிப்புத்தன்மைக்கான பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது, பரிசோதனையின்போது 26 வயது இளம்பெண் திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்தார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், முகாமில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸில் மயக்கமடைந்த பெண்ணை ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், ஆம்புலன்ஸில் இருந்தவர்கள், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மயக்க நிலையில் இருந்த அந்தப் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தப் பெண், ஆம்புலன்ஸில் தனக்கு நடந்த கொடூரம் குறித்து காவல்துறையிடம் தெரிவித்தார்.

அதில், “ஊர்க்காவல் படையின் ஆட்சேர்ப்பு முகாமில் நடந்த உடல் பரிசோதனையின்போது சுயநினைவை இழந்து மயங்கிவிட்டேன். ஆம்புலன்ஸில் சென்றபோது எனக்கு நடந்த சம்பவம் குறித்து ஓரளவு மட்டுமே நினைவிருக்கிறது. ஆம்புலன்ஸில் இருந்த மூன்று அல்லது நான்கு பேர் என்னை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்” என்று தனக்கு நடந்தவற்றை கண்ணீருடன் விவரித்திருக்கிறார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியது உறுதியானது.

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து, பீகார் அரசு சிறப்பு குழு ஒன்றை அமைத்து விசாரணையைத் தீவிரப்படுத்தியது. பெண்ணின் புகாரின் பேரில் ஆம்புலன்ஸ் ட்ரைவர் வினய் குமார் மற்றும் டெக்னிசீயன் அஜித் குமார் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களின் இரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

Advertisment

இதுகுறித்து பேசிய கயா மாவட்ட மூத்த காவல் கண்காணிப்பாளர் ஆனந்த் குமார், “பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, இரண்டு மணி நேரத்திற்குள் சம்பவத்திற்கு காரணமானவர்களை கைது செய்தோம். அவர்களிடம் வேறு யாருக்காவது இதில் தொடர்பு இருக்கிறதா என்று விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், இது தொடர்பாக சிறப்பு குழு மற்றும் தடயவியல் குழு அமைக்கப்பட்டு விசாரணை முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. சிசிடிவி காட்சிகள் மற்றும் பிற தொழில்நுட்ப ஆதாரங்களை ஆய்வு செய்து, விரைவான விசாரணைக்குப் பின்னர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்” என்று தெரிவித்தார்.

பீகார் மாநிலத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில், ஆம்புலன்ஸில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அரசியல் களத்திலும் பேசு பொருளாக மாறியுள்ளது. பீகார் மாநிலத்தில் பாஜக கூட்டணியுடன் நிதிஷ் குமார் தலைமையிலான ஜே.டி.யு (JDU) கட்சி ஆட்சி செய்து வருகிறது. மேலும், இந்தக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் லோக் ஜன்சக்தி கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் சிராஜ் பஸ்வான், இந்தச் சம்பவம் தொடர்பாக ஆளும் கட்சியை கடுமையாக விமர்சிதிருக்கிறார்.

இதுகுறித்து பேசிய அவர், “குற்றங்கள் பெருகி வரும் ஒரு அரசாங்கத்தை நான் ஆதரிப்பது வருத்தமாக உள்ளது. இதைக் கட்டுப்படுத்துவது அவசியம், இல்லையெனில் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும். இது பீகார் மக்களின் வாழ்க்கையுடன் விளையாடுவதாகும். அரசு நிர்வாகம் குற்றவாளிகளுக்கு முன் தலைவணங்குகிறது. கொலை, வன்கொடுமை, கூட்டு பாலியல் வன்கொடுமை, கொள்ளை, திருட்டு, மற்றும் பெண்களைக் கேலி செய்தல் போன்ற குற்றங்கள் மாநிலத்தில் ஒன்றன் பின் ஒன்றாக நடைபெறுகின்றன. கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், தொடர்ந்து இதுபோன்று நடப்பது மாநிலத்தின் சட்ட ஒழுங்கு குறித்து கேள்வியை எழுப்புகிறது. ஒருவேளை, இது நமது அரசாங்கத்தை இழிவுபடுத்துவதற்காக நடந்தாலும், அதனை அரசுதான் தடுக்க வேண்டும்” என்று காட்டமாக விமர்சித்தார்.

Advertisment

இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் எழுப்பி வந்த நிலையில், தற்போது ஆளும் கூட்டணிக் கட்சியிலிருந்தே கலகக் குரல் வெடித்திருப்பது நிதிஷ் குமாருக்கும், பாஜக கூட்டணிக்கும் பெரும் தலைவலியாக மாறியுள்ளது.